திங்கள், 20 செப்டம்பர், 2010

அஞ்சல் - 6


02-3-2005


அஞ்சல்- 6

அன்பு மறவாத தோழிக்கு!

நீயும் , உன்னை சார்ந்தவர்களும் நலமாக
இருக்கிறீர்களா? இப்போதெல்லாம் கடவுளை வேண்டுகிறேன் என்றோ , பிராத்திக்கிறேனென்றோ சொல்வதில் எனக்கு விருப்பமில்லை; அப்படியே சிலரிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது மனதுக்குள் குற்ற உணர்ச்சி தான் மேலோங்குகிறது. கடவுள் மீதான நம்பிக்கை மெல்ல மெல்ல கரைந்து போய் கிட்டத்தட்ட 20 வருடங்களாகிறது..! நம்பாத கடவுளிடம் எப்படி பிராத்தனை வைப்பது?? பிராத்தனை விட்டுப் போன பின் ஒருவரின் நலனுக்காக பிராத்திக்கிறேன் என்று எப்படி பொய் சொல்வது??

எனக்கு என்ன வேண்டுமென்று நான் நினைக்கிறேனோ அல்லது விரும்புகிறேனோ எனக்கு என்ன வேண்டுமென்று நான் நினைக்கிறேனோ அதை நானே போராடிப் பெற்றுக் கொள்ளப் பழகிவிட்டேன். போராடியும் கிடைக்கவில்லையென்றால் கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரும் முனைப்புக்கு நான் தயாராக இருக்கிறேன்.என்னைச் சார்ந்தவர்கள் அல்லது நான் சார்ந்திருப்பவர்கள் எல்லோரும் நல்லா இருக்க வேன்ண்டுமென்ற முனைப்பான விருப்பத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன். அதையும் மீறி இல்லாததாக நான் நினைக்கும் கடவுளிடம் எனக்கு இதை தாரும் பதிலுக்கு நான் அதை தருகிறேனென்ற நேர்த்தியை எனது பாசையில் சொல்வதென்றால் கடவுளுக்கான லஞ்சப் பட்டியலை தயாரிக்கும் சிறுபிள்ளைத் தனம் இப்போது என்னிடம் இல்லை.

ஒவ்வொரு வெள்ளியும் வைரவர் கோவிலுக்கு போன, நால்லூர் கந்த சுவாமி கோவில் 25 நாள் திருவிழாக்காலத்திலும் விரதமிருந்து அடியழிக்கிற, கந்தசட்டிக்கு உபாவாசமிருந்து சூரன் போர் பார்த்து அடுத்த நாள் பாறனை முடிக்கிற , திருவெம்பாவைக்கு கோலம் போட்டு விரதமிருக்கிற சாந்தாவா இதை எழுதுறாள் என்று இந்த கணம் உன் மனதில் பழைய நினைவுகள் வலம் வரலாம் என்பது எனக்கு தெரியும்.. ஆனாலும் அதே சாந்தா தான் உண்மையில் இதையும் எழுதுகிறேன்.

"கடவுள்" என்று ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி அல்லது சந்தேகம் சிலருக்கு குறிப்பிடத் தக்க சில சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து வலுவானதாகிறது. அப்போது தான் பகுத்தறிவு பல ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கும். அதே சந்தர்ப்ப சூழ்நிலைகள் தாக்கினாலும் பெரும்பாலானோருக்கு அந்தச் சந்தேகம் வருவதில்லை, காரணம் அவர்கள் முன்னாள் வினைப்பயனின் காரணமாகவே இந்நாள் வாழ்கையும் சம்பவங்களுமென்று நம்புகிறவர்கள் அவர்கள். அதிர்ஷ்டவசமா அல்லது துரதிஷ்டவசமா என்று தெரியவில்லை..எனக்கு அந்த சந்தேகம் தான் வலுத்ததே தவிர முற்பிறப்பு பற்றியெல்லாம் யோசிக்க வரவில்லை.

அண்டைக்கு ஒரு நாள்  சென்னையில் செண்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு பிச்சைக்காரர் குப்பைத் தொட்டியைக் கிளறி எடுத்து சாப்பிட்டதை பார்த்த போது தான் பிச்சைக்காரர்களின் நிலமையின் தாக்கம் மனசை தாக்கினது. ஈழத்தில்  வீடு வீடா வந்து சாப்பாடு கேட்கிறவையாயும், சாப்பாட்டுக்காக  எங்கட வீட்டில் விறகு வெட்டி தந்திட்டு சாப்பாடு வாங்கிட்டு போறவையாயும் அல்லது பஸ் தரிப்பிலோ ரெயினுக்குள்ளேயோ பாட்டுப் பாடி பால் டின்னைக் குலுக்கி காசு கேட்கிறவையாயோ தான்  பிச்சைக்காரர்களாய் பார்த்த எனக்கு இது தான் என்ன கடவுள் என்று யோசிக்க வைச்ச முதல் வெறுப்பு என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் குறிப்பா சென்னை  எனக்கு வாழ்கையின்  முக்கிய  பாடங்களை படிப்பிச்சிருக்கெண்டு தான் சொல்ல வேண்டும்.  ஈழத்தில் வளந்ததும், படித்ததும், பார்த்த உலகமும் வேறு...இங்கே தமிழ் நாட்டில் நான் பார்த்து படித்த உலகம் வேறு.. கடவுள் நம்பிக்கைக்கும், பக்திக்கும் கோவிலுக்கும் வரலாறு வைத்திருந்த ஒரு திருநாட்டில் தான் நான் கடவுளைப் பற்றிய மாற்றுச் சிந்தனைகளை படிக்கத் தொடங்கிய விநோதம் நடந்தது.
ஈழத்தின் நிகழ்வுகளும் சரி , என் வாழ்கையின் பல முக்கியமான நிகழ்வுகளும் சரி மனதை ரணமாக்கிய அத்தனை  வாழ்கையின் மாற்றங்களும் ஒவ்வொரு அனுபவமாக  சென்னையில்  வாழத் தொடங்கிய பின் தான் எனக்கு நிகழ்ந்தது. ஈழத்தில் அப்பா அம்மா என்ற இருவரின் பொறுப்பில் வீட்டின் சமர்த்து பிள்ளையாக பள்ளி போவதும், விளையாடுவதுமாயிருந்த இளவரசி வாழ்கை சென்னை மண்ணில் மாறிப் போயிற்று.  வீட்டின் பல விசயங்களை நான் பொறுப்பெடுக்க வேண்டிய சூழலும், எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமுமாய் அப்போது தான் நான் என்னை வளர்க்கத் தொடங்க வேண்டிய கட்டாயத்திலிருந்ததால் ஒவ்வொரு நிகழ்வுகளும் எனக்கு ஒரு படிப்பினையாகப் போயிட்டுது. பல படிப்பினைகள் துயரமான முடிவுகளைக் காட்டிச் சென்றது.

"கடவுள்" என்ற அந்த வார்த்தை மீதான விருப்பம் எங்கட மக்கள் இலங்கையில் கொத்து கொத்தாக இலங்கை இராணுவத்திடம் சிக்கி சின்னா பின்ன பட்ட போதும், அமைதி காக்கிறேன் பேர்வழி என்று I.P.K.F வந்து பின் அவர்களும் அதே கைங்கரியத்தை செய்யத் தொடங்கிய போதும் கழறத் தொடங்கி இப்ப நம்பிக்கையின்மை கலந்த கோபமாகவும் வெறுப்பாகவும் போன பின் சாமி அறைப் பக்கமே போகப் பிடிக்கவில்லை.  கடவுள் என்பவர்  சோதிக்கலாம்; ஆனால் சாகடிக்கலாமோ?? அதுவும் கொடூரமாக சித்ரவதை செய்து , மானபங்கப்படுத்தி ஒரு உயிரை  இன்னொரு மானுடம் கொல்ல எப்படி அனுமதிக்கலாம்?? அதை தடுக்காமல் எப்படி இருக்கலாம்?? தடுக்க முடியாது என்றால் கடவுள் என்ற தகுதி எதற்கு??  எங்களுக்கு நேரடியாக இந்தக் கொடூரங்கள் நடப்பதால் இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டியதாகிவிட்டது. எதுவும் நடக்காமலிருந்திருந்தால் வழமை போல் கோவில் போய் விரதமிருந்து , உபவாசமிருந்து கடவுளை கும்பிட்டுக் கொண்டிருந்திருப்பேனோ என்னமோ??

எப்படி ஒரு எதிரியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் சந்திக்கும் சந்தர்ப்பங்களை தவிர்க்க விரும்புகிறேனோ அதே அளவு கோவிலுக்கு போவதையும் தவிர்க்க பாடுபடுகிறேன். அதுவும் லீலா மாமியும் அவவோடு சேர்ந்து அந்த 1988ம் ஆண்டின் தீபாவளி நாளண்டு எங்கள் அயலில் I.P.K.F ஆல் கொல்லப்பட்ட 32 பேரின் மரணச் செய்தியின் பின் கடவுளாவது ஒன்றாவதென்று வெறுப்பு மூண்டுவிட்டது. அந்த வெறுப்பு தனிப்பட்ட ரீதியில் எனக்குள் எரிமலையாக வளர்ந்திருக்கே தவிர குறைய வில்லை. லீலா மாமி , நடேஸ், அப்பா என்று எதிர்பாராத இழப்புகள், தாங்கவியலாத மரணங்கள் தந்த வலி வாழ்கையில் இன்னொருவிதமான பாடத்தை படிப்பிக்க தொடங்கியிருக்கிறது எனக்கு.


மரணம் என்பது தெரிந்த ஒரு முடிவு தான்! அதை எதிர் கொண்டு தானாக வேண்டும். இல்லையென்று சொல்ல வில்லை. ஆனால் ஒருவரின் மரணம் உயிரோடு இருப்பவர்களை வாழ் நாள் முழுவதும் நடைபிணங்களாக திரியவைக்குமளவுக்கு இருக்குமேயானால் , உலகின் அத்தனை ஜீவராசிகளுக்கும் சம ஆளவில் கருணை பாலிக்கும் , தாயுமானவனானவன் தந்தையுமானவன் என்ற கடவுளின் தராசு தட்டில் தளும்பல் அல்லவா தெரிகிறது. எந்த தாய்க்கு அல்லது தாய்க்கு தன் பிள்ளைகள் துடிக்க துடிக்க சித்திரவதை செய்து தான் தங்கள் மரணங்களை வாங்க வேண்டுமென்று சொல்ல மனம் வரும்? எந்த கருணையுள்ள ஒருவர் தன் மகள்  பலரின் கையில் கசக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட வேண்டுமென்று விதி எழுத மனம் வரும்?? அப்படி தான் விதி உனக்கு இது தான் நடக்குமென்று அவன் எழுதினது தான் வாழ்கை என்றால் ,  ஜீவராசிகளின் விருப்பு வெறுப்புகளைப்பற்றிய அக்கறையில்லாமல் எவனோ ஒருவனால் எழுதப்பட்ட விதி தான் உன் வாழ்கை என்றால் அவனை கடவுள் என்று நாம் ஏன் கொண்டாட வேண்டும்??? அதனால் என்ன பயன்?? அவனை நான் ஏன் எனக்கு எந்த வகையிலும் தீங்கு நினைக்காத என் அப்பா அம்மாவுக்கு ஒப்பானவனாகப் பார்க்க வேண்டும்..??


கடவுள் இருக்குதா இல்லையா என்று நான் ஆராயப் போவதில்லை; இருந்தால் இருக்கட்டும்; அப்படி இல்லையென்றாலும் நான் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை; என்னுடைய வாழ்கையை நான் நடத்தும் வரை எனக்கு கடவுள் தேவையில்லை;

கடவுள் இருக்கிறான், கைவிட மாட்டான் என்று நம்பிய எந்தவொரு தருணத்திலும் அந்த நம்பிக்கைகள் காப்பாற்றப்படாமல் பொய்த்து போன பின் , இனி எந்த தருணத்திலும் எது நடப்பினும் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை எனக்குள் உருவாக்கிக் கொள்ள பழகிவிட வேண்டியது தான். 

ஒருவரின் மரணமா..சரி எதிர் கொள்வோம்?? மிஞ்சி மிஞ்சி போனால் அந்த மரணத்திற்காக என்னால் என்ன செய்ய முடியும்..?? கவலைப்பட முடியும்?? கண்ணீர் விட முடியும்?? காலப் போக்கில் கண்ணீர் நின்று விடும்; மனதினடியில் அந்த வலியும் துயரமும் முடங்கிப் போயிருக்கும். அவ்வப்போது ஏதோ ஒரு காரணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து திரும்ப திரும்ப வலிக்க வைத்துவிட்டு பழையபடி போய் முடங்கிக் கொள்ளும். அவ்வளவு தானே?? சரி விடு நான் அதை பழகிக் கொள்கிறேனே...!


எனக்கு என்ன வேண்டுமென்றோ , வேண்டாமென்றோ தீர்மானிக்க வேண்டியவளாய் நானே இருக்க வேண்டுமென்றால் கடவுள் என்ற மாயையை நோக்கி என் கைகள் பிச்சை கேட்கக் கூடாது. அதனால் இப்போதெல்லாம் நானெந்த நேர்த்திக்கடனும் வைப்பதில்லை. :):)


ஆனால் உனக்கு தான் தெரியுமே என்ர அம்மாவைப் பற்றி?? உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் , என்ன கஷ்டம் வந்தாலும் உடன யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பருக்கு  நேர்த்தி வைச்சிடுவா..!:):) முனியப்பரே இப்ப ஆமிக்காரரிடம் நேர்த்தி வைக்கிற விதியில சீரழிஞ்சு போய்க்கிடக்கிறார் என்று அம்மாவுக்கு மறந்து போச்சுப் போல...  :):)


இப்பவும் எனக்காகவும் என்ர வயித்தில இருக்கிற பிள்ளைக்காகவும் , டியூமருக்காகவும் கூட காசு நேர்ந்து முடிஞ்சு சாமி அறைக்குள் வைத்திருக்கிறா. உந்த மாதிரி  காசு நேர்ந்து முடிஞ்சு வைச்சிருக்கிற சின்ன சின்ன வெள்ளைப் பொட்டணிகள் ஒரு அம்பாரம்  இந்த சாமியறைக்குள் ஒரு பெட்டி நிறையக் கிடக்கு தெரியுமே?? அந்த அம்பாரங்கள் அத்தனையும் அம்மா முனியப்பருக்கு ஆசை காட்டி வைச்சிருக்கும் லஞ்சப் பணம் தான். 

 முனியப்பர் அம்மாவிடம் வாங்கிய லஞ்சங்களில் பெரும்பாலான நேர்த்திகளைக்  கவனிக்காமல் , கிடப்பில் தூக்கி எறிஞ்சிட்டார். அம்மா தன்ர நேர்த்தியில் பலனளிக்காதவைக்கு குடுத்த லஞ்சப்பணத்தை திரும்ப எடுப்பதும் இல்லை ..அவ்வளவு பயம் முனியப்பரிடம் அம்மாவுக்கு..:):)


சலிப்படைந்த தருணங்களின் கூட்டுத் தொகையாக வாழ்கை போகத் தொடங்கிவிட்டது. இனி வயிற்றிலிருக்கும் குழந்தையும் அதன் வளர்ச்சியும், கவனிப்புமென்று என்னுடைய  இயல்பிலிருந்து இன்னொரு தடவை விலகி நடக்க வேண்டிய கட்டாயம்  எனக்கு. பத்தாக் குறைக்கு  கொசுறாக  உடலுக்குள் இரண்டொரு கட்டிகளையும் சேர்த்து பராமரிப்புப் பார்க்க வேண்டும்,,,


"நீ போன பிறப்பில என்ன கருமம் செய்தியோ...இப்ப இந்த மாதிரி அனுபவிக்கிறாய்..பிறந்த நாள் தொட்டு நோயும் நொடியுமா...உனக்கெண்டு இப்பிடி விதி எழுதியிருக்கு பார்"  இது பெரியம்மாவோட நேற்று போன்ல கதைக்கேக்கில  பெரியம்மாவின் அங்கலாய்ப்பு.  

எத்தனை இலகுவாக  போன பிறப்பின் என்னுடைய குணதிசயம், நடத்தை எல்லாம் இந்தப் பிறப்பில் எனக்கு வரும் இடர்களையும், வருத்தங்களையும், நோய் நொடிகளையும் வைத்து கணிக்கக் கூடியதாக இருக்கிறது என்று ஒரு நிமிசம் யோசித்துப் பார்.....சிரிப்பு சிரிப்பா வரேலையா உனக்கு??  :):)  இந்தப் பிறப்பை விட போன பிறப்பில் நான் அதிக பாவம் செய்தவளாக இருந்திருக்கிறேனா  அல்லது அடுத்த பிறப்பில் எனக்கு இதை விட கொடூரமான  நோய் எல்லாம் வருமோ??  :):) `


என்ன இவள் இப்பிடியெல்லாம் யோசிச்சிருக்கிறாளே என்று நினைக்கிறாயா?? இவளா  ஐந்தாம் வகுப்பு படிக்கேக்கிலயே சாமி மேல பாட்டெல்லாம் எழுதினாள் என்று சந்தேகப்படுகிறியாக்கும்...எனக்கும் சில நேரம்  அப்படித் தான் இருக்கும்.. என்னுடைய பழைய நாட்களுக்கான அடையாளங்கள் பல என்னைவிட்டு கழண்டு போய்க் கொண்டிருக்கின்றன என்பது எனக்கு தெரிகிறது. அதை ஒன்றும் செய்ய முடியாது. எப்பிடி அஞ்சு வயசில போட்ட சட்டை வடிவாக இருக்கிறது எண்டுறதுக்காக இருபது வயசுலயும் அதை போட வேணுமெண்டு நினைக்கிறது  நகைப்புக்குரியதோ  அது மாதிரி தான் இந்த மாதிரி தெளிவுகள் அல்லது மன மாற்றங்கள்...அவை சரியானவையாக இருந்தாலும் சரி பிழையானவையாக இருந்தாலும் சரி ....!

வேற என்னடி??   வாழ்கையில் ஒவ்வொரு நிலையிலும் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களும் எம்முடைய ஒவ்வொரு பிம்பங்களாய் நிறுவப்பட்டு விடுகின்றன. எனக்குள் ஏற்பட்ட ஒரு மாற்றத்தின் பிம்மம் பற்றிய விளக்கம் தான் இது. உனக்கும் இத்தனை காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். எப்படி எப்படியோ வாழ்கை பாதை மாறிப் போயிருக்கலாம்; உறவுகளின் இழப்புகளும் , புதிய உறவுகளின் மலர்வுகளுமாய் உன் வாழ்கையின் விதானம் விரிந்திருக்கலாம். என்ன நடந்தது என்ன நிகழ்ந்தது என்ற யூகித்தலுக்கான திறன் கூட இல்லாமல் எல்லாவற்றுக்கும் மேலாக உன்னுடைய முகத்தையும்,  பழைய நட்பின் நினைவுகளையும் மட்டும் வைத்துக் கொண்டு இந்த மூலையிலிருந்து நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணம் என்னை நானே பரிதாபத்துடன் பார்த்துக் கொள்கிறேன். வேதனையான வேடிக்கை இது...  :(

மீண்டும் இன்னொரு கடிதத்தில் உன்னை சந்திக்கும் வரை ......

“Good friends are like stars.... You don't always see them, but you know they are always there”

இங்ஙனம்
அன்புடன்
சாந்தா.

--



திங்கள், 6 செப்டம்பர், 2010

அஞ்சல் - 5.

02.06.2010

அன்பு மறவாத சிவசோதிக்கு!

நீ நலமாயிருக்க வேண்டுமென்ற பிராத்தனையுடன் தான் இம் மடலையும் எழுதத் தொடங்குகின்றேன். நான் நலம் என்று இனிமேல் எப்ப எழுத முடியுமென்று எனக்கு தெரியவில்லை. இப்போதைக்கு என்னிடம் அந்த வாசகத்திற்கு அர்த்தமில்லை என்று வைத்துக் கொள்வோம். :):) வேற என்ன..வழமை போல் எனக்கு ஏதாவது உடம்புக்கு ஏதாவது ் வந்திருக்குமென்று இந்தக் கடிதத்தை வாசிக்கும் போஒது நீ நினைப்பாய் என்று என்னால் இப்போதே உணரமுடிகிறது...

நீ நினைப்பதும் சரி தான்..நான் எப்ப தான் நோயில்லாமல் இருந்திருக்கிறன்?? பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே இப்படித் தானே...ஒரு மாசத்தில் இரு தடவையாவது ஏதாவது ஆகாமல் நான் இருந்தேன் என்றால் ஆச்சரியம் தான்..என்ன?? :):) நான் வாங்கி வந்த வரங்களில் அதுவும் ஒன்று தானே?? :):)

வாழ்கை வயதுகளை விழுங்க விழுங்க நோய்வாய்படலின் தகுதிகளும் தாக்கங்களும் அதிகரித்துக் கொண்டு தான் போகின்றன. தடிமன், காய்ச்சல், ஆஸ்துமா விலிருந்து தொடங்கிய என் நோய்வாய்ப்படல்...அப்பாவின் மறைவுக்கு பின் மன அழுத்தம் என்று ஒரு புதிய புதினமான சொல்லாடலோடு என்னை வந்து ஒட்டிக் கொண்டது. இங்கே துக்கத்தில் அழுவதை கூட மனநோயாக்கிவிடுகிறார்கள். கவுன்ஸிலிங் போ, தெரபியை பார் என்று ஆலோசனைகளும் அப்பாயிண்ட்மெண்டுமாய்..... இவர்கள் சொல்வதைப் பார்த்தால் எங்கட இனத்தில இருக்கிற அத்தனை பெண்களும் இவர்களுடைய மனநோயகத்தில் தான் இருக்க வேண்டும் போலகிடக்கு... :):)

இப்ப கொஞ்ச நாளா கண்டறியாத வயிற்று வலியொன்று வந்திருக்கு. எந்த வலியெண்டாலும் எனக்கு கை குடுக்கிறது இங்க தைலனோல் என்ற மருந்துக் குளிசை தான். யாழ்ப்பாணத்து பனடோல் மாதிரி. டிஸ்பிரின், அஸ்பிரின் எதுவும் எனக்கு சரி வருதில்லை. அவற்றை பாவித்தால் ஒவ்வாமை நோய் வந்துவிடுகிறது. முகமெல்லாம் தடிச்சு, சிவந்து, கடிக்கத்தொடங்கிவிடுகிறது.

இப்ப வந்திருக்கிற இந்த வயிற்றுவலி கொஞ்சம் வித்தியாசமா தான் தெரியுது. மாத்திரைகளுக்கு அவ்வளவு லேசில் ஆறமாட்டேன் எண்டு அடம் பிடிக்குது. குளிசை போட்டால் கூட கன நேரம் தாக்குப் பிடிக்குதில்லை. இங்க ஆஸ்பத்திரிக்கு போகவும் எனக்கு மனமில்லை. அங்க போனாலும் இதே தைலனோலை தான் தந்து அனுப்பிவிட்டு பின்னால ஆயிரக் கணக்கில் பில் அனுப்புவாங்கள்.


நல்ல வேளை இந்த வயிற்று வலியை பாராமல் என்ர மகனின் பிறந்த நாள் பார்ட்டியையும், பிரேமாவின் பேபி ஷவரையும் ஒரு மாதிரி செய்து முடிச்சன். அரும்பட்டு நேரத்தில் ..இல்லாட்டில் தை மாதம் 25ம் திகதி பிறக்க வேண்டிய பிள்ளை 7ம் திகதியே பிறந்திட்டார் பிரேமாவுக்கு, நல்ல வேளை நான் 2ம் திகதியே பார்ட்டியை ஒரு மாதிரி செய்து முடிச்சிட்டன். அண்டைக்கு தான் உந்த வயிற்று வலி உக்கிரமாயிருந்தது, என்ன செய்தும் கேட்கேலை...!

நானும் அதுக்குப் பிறகு மருமகனாரின் வருகையிலும், வந்த கையோடு புது வீட்டுக்கு அவை குடி போன மனக் கஷ்டத்திலும், பொங்கல்,...அது இது என்று வந்ததில் கொஞ்சம் அலட்சியமாகவும் , நிறைய வலியை சகித்துக் கொள்(ல்)வதுமாய் இருந்துவிட்டேன்... ஆனால் இப்ப ஒரு கிழமையாய் முடியாமல் போக எமர்ஜென்ஸிக்கு இழுத்துக் கொண்டு போய்ட்டார் என்னவர். அதன் பலனாக தொடர்ந்து டாக்டர் அப்பாயின் மெண்ட் , ஸ்கேனிங் அது இது எண்டு எல்லாம் செய்து முடிச்ச பின்னால ஒரு சந்தோஷமான செய்தியும் கூடவே கெட்ட செய்தியாயும் சினிமா டாக்டர் சொல்வது போல் சொல்லிட்டினம். சந்தோசமான செய்தி இரண்டாவது தடவையாக நான் தாயாகியிருக்கிறேன். கெட்ட செய்தி எண்டால் குழந்தையோடு சேர்ந்து பலோப்பியன் குழாயில் சிஸ் வளருதாம்...! :(:( இப்ப அது தான் எனக்கு நெஞ்சிடி!

அஷ்வத்தாமா ஒருவரே போதுமென்று தான் மனதுக்குள் விருப்பமிருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த நாங்கள் எதுவும் முனையவில்லை ..காரணம் தேவனுக்கு பொம்பிள்ளைப் பிள்ளை ஆசையிருந்ததால் ..he is the baker; I’m only the oven.. But we don’t know who decide the cake type. :):) எப்படியோ இன்னொரு பிள்ளை உருவா(க்)கியாச்சு..! பலோப்பியன் குழாயில் கட்டி உருவாகியிருப்பதால் குழந்தைக்கு ஆபத்து வருமோ என்ற பயம் ஒரு புறம். இந்தக் கட்டியின் வளர்ச்சி புற்றுநோய்க்கு அறிகுறியோ என்ற நடுக்கம் இன்னொரு புறம். இப்பாடியொரு இக்கட்டான சூழ்நிலையில் என் வாழ்கையும், ஆயுளும் இப்போது எனக்கு முன்னால் பெரியதொரு கேள்விக்குறியாகவே இருக்கிறது!

டொக்டர் உள்பட எத்தனை தான் எல்லாரும் பயப்பிட வேண்டாமென்று சொன்னாலும் , இவர்களுடைய மருத்துவ விளக்கங்களும் விண்ணானங்களும் எனக்கு அடிமுடி விளங்காததாலும் எதுவும் என்னுடைய கவலையை தீர்க்கக் கூடிய வல்லமையோடில்லை. சினிமா படங்களில் வரும் கான்ஸர் கதாநாயகன்களும், கதாநாயகிகளும் தான் மனக்கண்ணில் வந்து வந்து போகினம்.

அதொண்டுமில்லை;; சிஸ் வேற டியூமர் வேற..பயப்பிடாதை என்று தேவன் சொன்னால் ஆத்திரம் வருது; என்னை சமாதானப்படுத்த பொய் சொல்லுறாரா அல்லது நான் செத்துப் போனால் பரவாயில்லை என்று நினைக்கிறாரா என்றெல்லாம் விபரீதமான சந்தேகமெல்லாம் வருது. :/

இந்தக் கட்டியை இப்பவே அகற்றினால் கருவாயிருக்கும் பிள்ளையை அழித்துவிடுவினம். இந்தக் கட்டியை நீக்குவதென்றால் பலோப்பியன் குழாயையும் வெட்டி விடுவார்களெனிலலினியொரு குழந்தைக்கு வழியில்லை..ஆக இப்போது ஒருவாகியிருக்கும் இந்தக் குழந்தையை நான் எப்படியாவது பெற்றெடுக்கத் தான் வேண்டும். எனக்குள்ள வளருகிற என்ர பிள்ளையை கொன்று எனக்கு உயிர் கொடுக்க வேணுமே சொல்லு பார்ப்பம்??

கட்டியை அகற்றும் பட்சத்தில் இந்தக் குழந்தையை அழிக்க வேணுமென்ற்ல் கடைசிவரை பிள்ளை பிறக்கும் வரை கட்டியை அகற்றுவதில்லை என்று முடிவோடு தான் நாளைக்கு கிளினிக் போய் டொக்டரிடம் சொல்லப் போறேன். அநேகமாக குழந்தையையும், கட்டியையும் சேர்த்தே 9 மாசம் வயிற்றில் வளர்க்கப் போகிறேன் என்று தான் நினைக்கிறேன். அது தான் என்னுடைய பயமும் கூட...!

இந்தப் பிள்ளை பிறக்கும் வரைக்கோ அல்லது பிறந்த பிறகோ எனக்கு ஏதும் ஆகாமல் இருக்க வேண்டுமென்பது அடுத்த என்னுடைய கவலை. எனக்கொன்று ஆச்சென்றால் பாவம் இந்தப் பிள்ளையை தாயை தின்னி என்று எங்கட குடும்பத்தார் பழி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான் இருந்து என்ர பிள்ளைகளை கவனிக்கிறது போல வேற யாரும் பாப்பினமே என்ற கேள்வி இன்னொரு பெரிய கவலை..! பெற்ற பிள்ளைக்காகவும், பிறக்கப் போகும் பிள்ளைக்காகவும் கவலைப்படுவதா அல்லது மரண பயத்திலிருக்கும் என்னை பார்த்து நானே கவலைப்படுறதா எண்டு எனக்கு விளங்கேலை.. !

வீணாக கவலைப்படுறன் என்று அறிவு சொன்னாலும் மனது அதை கேட்க தயாராயில்லை. இப்ப தான் விளங்குது மனுசருக்கு சாவு திகதி தெரியாமல் இருப்பது எத்தனை நல்ல விசயமெண்டு. ஒரு மனுசன் தன்னுடைய மரணத்துக்காக தானே அழும் கேவலமும் பரிதாபமும் போல் வேற எதுவுமிருக்காது சிவசோதி. இதை என்ர சொந்த அனுபவத்தில உனக்கு எழுதிறன்.

அழுவதே கேவலம்; அதை விட செத்துவிடுவோமோ என்ற பயத்தில் , சுய இரக்கத்தில் கவலைப்படுதையும் கண்ணீர் விடுவதையும் மிக மிக கேவலமாக உணர்கிறேன்.. அந்த உணர்வில் தான் என்னுடைய பயங்களையெல்லாம் அப்படியே இந்தக் கடிதத்தில் கொட்டிவிட்டிருக்கிறேன். கவலை தீர்ந்ததா இல்லையாவெண்டு எனக்கு விளங்கேலையடி...ஆனால் என்னவோ ஏதோ ஒரு பாரத்தை இறக்கி வைச்ச மாதிரியிருக்கு.

எப்படியோ இந்தச் சூழ்நிலையில் எனக்கு என்ன நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி ..அதை நீ அறியப் போகும் விதியிருந்தால் எல்லாம் முடிந்திருக்கும் ....ஒன்று நான் அல்லது எனது கட்டி..!

வேறு என்ன ?? மிச்ச விசயத்தை நாளைக்கு டொக்டரிடம் போய் வந்த பின் என்னுடைய மனநிலையைப் பொறுத்து ஆறுதலாக (முடிந்தால்) கடிதம் எழுதுவன்.

குள்ளே வளரும் கட்டி..!
என்ன ??

"A real friend is one who walks in when the rest of the world walks out."

இங்ஙனம்
அன்புடன்
சாந்தா.

செவ்வாய், 27 ஜூலை, 2010

அஞ்சல் - 4

அஞ்சல் – 4

01.14-2005

அன்புள்ள தோழி சிவசோதி!

இன்றைக்கு தைப்பொங்கல் நாள். இப்ப தான் பொங்கி முடிச்சேன். அம்மா சாமியறைக்கு முன்னால் படையல் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். இந்த முறை அஷ்வத்தாமாவின் கையால் முதல் சிறங்கை அரிசி போட்டு பொங்கினோம். குஞ்சுக் கையில் அரிசியை அள்ளிக் கொடுத்து அவரைக் கொண்டு போட வைப்பதற்குள் உன்பாடு என்பாடாய் போய்விட்டது. ஆனால் அம்மாவுக்கு அதில் ஒரு சந்தோசம் தன்னுடைய மூத்த பேரன் கையால் இந்த வருசப் பொங்கல் பொங்குவதில்..!

ஊரில் என்றால் பொங்கல் தினம் இப்பிடியா இருக்கும்?? எத்தனை ஆரவாரமாய் விடியல் காலம்பறையே எழும்பி பொங்குவம்?? அதுவும் அப்பா அந்த ஆஸ்துமாவிலும் குளிரையும் பாராமல் பொங்குவதற்கு வந்துவிடுவாரே.. உலக்கையை வைச்சு கோலப் பொடியால் கோலம் போடுவதும், கரும்பு, மஞ்சள் குருத்து என்று அலங்காரம் பண்ணுறதும், அயலட்டையில் எங்கட பொங்கல் தான் முதல் பொங்கலா இருக்க வேண்டுமென்ற போட்டியில் வெடி கொளுத்தி அடையாளம் காட்டுறதும் எண்டு ..பொங்கலென்றால் ஒரு சந்தோஷம் தான் என்ன??

அத்தினை சந்தோஷமும் இப்ப எந்த திக்கில் போனதெண்டு தெரியேலை. அங்க எழும்பிற மாதிரி தான் இங்கயும் விடியல் காலை 4 மணிக்கு எழும்பி, குளிச்சு முழுகி பொங்குறம் நானும் அம்மாவும் . ஆனாலும்..இங்க பொங்குற பொங்கல் பொங்கல் என்ற அந்த முழுமையான உணர்வை தருவதேயில்லை. முற்றத்துப் பொங்கலுக்கோ, வாசல் கோலத்துக்கோ இடமில்லை இங்க..இந்த கொட்டுற பனியில! மண் பானையோ, கரும்புக் கதியாலோ, மஞ்சள் இலை, வாழை குருத்து, தென்னம் பாளை , பட்டாசு வெடி எண்டு எதுவுமே இல்லாமல் பொங்குறது ஒரு பொங்கலே..?? :(

எந்த ஆரவாரமும், சிரிப்பும் , கலகலப்பும் இல்லாத பொங்கல் நாள் என்ற கடனுக்காக பொங்குறம் இங்க.. ஏதோ அனாதையள் மாதிரி உணர்வு தான் மேலோங்குது..!

யோசிச்சுப் பார்த்தால் அஷ்வத்தாமாவுக்கு எல்லாம் எங்கட ஊர் , மொழி, இனம் என்ற எந்த உணர்வும் வராது..அவர் வளர்ந்து வரும் நாட்களில் என்று நினைக்கிறன். அந்த உணர்வு அவருக்கு இருக்க வேண்டுமென்று நான் விரும்பினாலும் கூட முன்ன பின்ன தெரியாத ஒன்றைப் பற்றி அவருக்கு எப்படி பற்றுதல் வரும்?? நாங்களாக கதை கதையா சொன்னால் கூட இயற்கையா வரும் பற்றுதல் அவருக்கும் வருமா என்று எனக்கு சந்தேகமாகத் தான் இருக்கு.

ஆனாலும் என்னுடைய கடமையாக நான் நினைக்கிறது அவருக்கு தமிழ் படிப்பிக்கிறதும், எங்கட தமிழ் பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுப்பதும், நாங்கள் ஊரில் என்னென்ன கொண்டாடினோமோ அதெல்லாம் அவரோடு சேர்ந்து இங்கும் கொண்டாடவேண்டுமென்பதும் தான். பார்ப்பம்....இது எதுவரை சாத்தியமாகுதெண்டு!!

நல்ல ஒரு இனிமையான காலை நேரம் இப்போது. வெளியில் நிறைய பனி பெய்து முற்றமெல்லாம் வெள்ளை வெளேரென்று மின்னிக்கொண்டிருக்கிறதைப் பார்க்க நல்ல வடிவா இருக்கு. குளிருக்கு எத்தனை தான் ஹீட்டர் போட்டாலும் சுட சுட ஒரு கோப்பியை எடுத்து வந்து கொஞ்சம் கொஞ்சமா ஊதி ஊதிக் குடிப்பதைப் போல ஒரு ஆத்ம திருப்தி எனக்கு வேறு எதிலும் கிடைப்பதில்லை. நான் ஒரு காபி அடிக்டட்!

ஒரு கப் கோப்பியோடு வந்து இருந்துவிட்டேன் உனக்கு கடிதம் எழுத. வாசல்கதவிலிருக்கும் கண்ணாடி வழியாக வெளியில் பெய்து கொண்டிருக்கும் பனியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் அஷ்வத்தாமா. அவருக்கு இது இரண்டாவது பனிக்காலம். முதல் பனிக்காலத்த்தின் போது அவர் பிறந்து மூன்று நாலு மாசம் தான். அதனால் இந்த பனி அவருக்கு புதுசும் புதினமுமாயிருக்கு. புதுமையாயும் இருக்கும் போல.. என்ன இப்பிடி வானத்தில இருந்து வெள்ளை வெள்ளையாய் கொட்டுது எண்டு யோசிக்கிறாரோ என்னமோ?? அத்தனை ஆர்வமாய் பார்த்துக் கொண்டு நிற்கிறார். தன் பாட்டுக்கு பனியைப் பார்த்து சந்தோஷக் கூச்சலும் குதியலுமாய் என்னமோ தன்னுடைய பாஷையில் பேசிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு அனுபவிக்கிறார்.

கடும் குளிர் என்பதால் ஆளை மூடிக் கட்டி விட்டிருக்கிறன். போன கிழமை இந்த கடுங்குளிரால் பிள்ளைக்கு காய்ச்சல் கீய்ச்சல் வந்திடுமோ என்ற பயத்தில் ஹீட்டரை நல்ல உச்சத்தில் போட்டுவிட்டேன்..கொஞ்ச நேரத்தில் பார்த்தால் பிள்ளையின் மூக்கிலிருந்து இரத்தம் வரத் தொடங்கிட்டுது, எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போட்டுது. 911 க்கு போன் போட்டு அம்புலன்ஸை கூப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எனக்கு மயக்கம் வந்திட்டுது. வந்த ஆம்புலன்ஸ்காரன் பிள்ளையை கொண்டு போறதா அல்லது அம்மாவை கொண்டு போறதா எண்டு நக்கல் அடிச்சான்.

அதுக்கு பிறகு ஹீட்டரை உச்சத்தில் போடுவதில்லை. பிள்ளைக்கு தான் குளிர் உடுப்புகளை போட்டுவிடுறது. ஆனால் அஷ்வத்தாமாவுக்கு கம்பளி உடுப்புகள் விருப்பமில்லை. கழற்றி விடச் சொல்லி ஒரே அடம்..! குடு குடு என்று ஒரு இடத்தில் இராமல் வீட்டுக்குள்ளேயே பிரகாரத்தை சுற்றுவது போல் ஓடிக் கொண்டிருக்கிறார். களைப்பெண்டு எதுவும் வராதா?? ஒரு இடத்தில் வந்து இருக்கமாட்டாரா எண்டு நானும் பாக்கிறன் இவர் நடக்கப் பழகின நாள் முதல் கொண்டு..ம்ஹூம்!

பொம்பிள்ளை பிள்ளை தான் வேண்டுமென்று ஆசைப்பட்டார் என்னுடைய பிராணநாதர். ஆனால் அஷ்வத்தாமா தான் பிறப்பார் என்று பந்தயம் கட்டினேன். பந்தயத்தில் வெற்றி பெற்றது நானென்றாலும் இப்ப அப்பாவும் மகனும் அத்தனை வாரப்பாடு. வேலையால் தகப்பன் வந்ததும் ஓடிப் போய் தகப்பனின் மடியில் ஏறிக் குந்திவிடுவார் மகனார். சோறு சாப்பிட தொடங்கின நாளிலிருந்து உறைப்பு புளிப்பு எல்லாம் சப்புக் கொட்டி சாப்பிடுவார். என்ர மனுசனுக்கு சமைக்கிறதில் நல்ல ஈடுபாடு எங்கட அப்பா மாதிரி. தகப்பனார் சமைக்க போனால் கடுகு , சீரகம், வெந்தயம் தாளிக்கும் போது தான் தான் அதுகளை போட வேண்டுமென்பது அஷ்வத்தாமாவின் அடம். அப்ப அவரின் கையில் இரண்டு மிளகு அல்லது கொஞ்சூன்ண்டு கடுகு, சீரகம் குடுக்க வேண்டும். நெருப்புக்கு பயம்..அதால அப்பா தூக்கி வைச்சிருக்க தூர நின்று எறிவார்..

யார் இண்டைக்கு குக் பண்ணினது என்று கேட்டால் “பேபி” என்று தன்ர நெஞ்சைத் தொட்டு சொல்வார்.

தகப்பன் நிற்கும் நேரங்களில் தகப்பனோடு தான் நித்திரை கொள்வார். தகப்பன் மகனுக்கென்று ஒரு தாலாட்டுப் பாட்டு வைச்சிருக்கிறார். கேட்டால் சிரிப்பு வரும். அது அவரே இயற்றினதாம். தன்ர மகனுக்கு மட்டும் தானாம்ச பாட்டெழுதுற எனக்கே பாடிக் காட்டினம் அப்பரும் மகனும்.. எந்த சுவரில் கொண்டு போய் தலையை முட்டுவது என்று எனக்கு விளங்கேலை.

தகப்பனும் மகனும் நித்திரை கொள்ளேக்கில படம் எடுத்தனான்.. அதுல ஒரு பிரதி உனக்கும் இங்க வைச்சிருக்கிறன் ..இந்த கடிதக் கவருக்குள்ளசபார்.. நீ அதை பார்க்கேக்கில அஷ்வத்தாமாவுக்கே பிள்ளை பிறந்திடுமோ யானறியேன் பராபரமேசJJ இந்தப் படம் அஷ்வத்தாமா பிறந்த கொஞ்ச நாளில் ஒரு மாதத்துக்குள் எடுத்த படம்..!

எப்பிடி இருக்கிறார் பார்த்தியா?? ஒர் பூக் கூடை மாதிரி இருக்குமடி அவரை தூக்கேக்கில.

குழந்தை என்றால் முகம் சுளிச்ச நான் இப்ப கீழ விடாமல் மடியிலேயே தூக்கி வைச்சிருக்கிறன்சஅது என்னமோ இந்தக் குழந்தையள் சரியான மாயக்காரர்கள். சிரிக்கிறாதும், அவையட பாஷையில ஊஉல்லூல்ல்ல் ஊவ்வ் என்று கதைக்கிறதும்..கொஞ்சுறதும் கடவுள் கூட இப்பிடி வடிவான பிறப்பாயோ அதிசயமாயோ இருக்கமாட்டார் .. அழுகை வரேக்கில வாய் வெம்புற பரிதாபத்தைப் பார்த்தால் எங்களுக்கு நாங்களே கொடுமைக்காரர் மாதிரி தெரியுது.

அதே நேரம் இந்தக் குழந்தையள் சரியான தற்கொலப்படை சாதியடி! சாப்பாட்டைத் தவிர வேற என்ன கையில் கிடைத்தாலும் அதை ஒருக்கால் வாயில் வைச்சு பார்க்க வேண்டும். எங்கட கண்ணுக்கு தெரியாத துகளுகளை கூட தவண்டு தவண்டு போய் எடுத்து லபகெண்டு வாயில வைச்சு சப்பிறதும், ருசி சரியில்லையெண்ட்டால் முகம் கோணுறதும்..அச்சோசஅச்சோச!

அப்பிடி போகுது அவருடைய புராணம்..!

நானும் என்னவோ உனக்கு புதினம் சொல்வது போல் குழந்தையை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறன். உனக்கும் இதே அனுபவங்கள் எப்பவோ வாய்த்திருக்கும், உன்னுடைய குழந்தைகளும் இதே மாதிரி தானே விளையாட்டுக் காட்டியிருப்பினம்??

நானும் அம்மாவும் உன்னைப் பற்றி கதைச்சால் அடிக்கடி உனக்கு பிள்ளைகள் இருக்கும். அதுவும் பொம்பிள்ளை பிள்ளை என்றால் சிவசோதி மாதிரியே சுருள் முடியாய், வடிவாய் இருக்கும் என்ன என்று அம்மா கேட்பாசநானும் கற்பனை பண்ணி பண்ணி பார்ப்பேன்..உன்னுடைய பிள்ளைகள் எப்படி இருப்பினம் உன்னைப் போல இருப்பினமா அல்லது உனது கணவரைப் போல இருப்பினமா எண்டு அடிக்கடி யோசிப்பேன், முகம் தெரியாத உன்னுடைய கணவரை கற்பனையில் எப்படி பார்ப்பது ?? அந்த முயற்சியில் எனக்கு எப்பவும் தோல்வி தான். .

எப்ப உன்னை சந்திப்பனோ? எப்ப உன்னுடைய குடும்பத்தைப் பார்க்கப் போறேனோ என்ற ஏக்கத்தை விட பார்க்க முடியுமா என்ற சந்திப்பேனா என்ற கேள்வியின் தாக்கத்திலேயே ஒவ்வொரு தடவையும் உள்ளுக்குள் நொருங்கி தூள் தூளாகிறேன். அந்த துகள்களை கவனமாக பொறுக்கி எடுத்து பிறகு நானே எப்பிடியும் சந்திக்கலாம் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் குழைத்து திரும்பவும் மண்பொம்மை ஒன்றை உருவாக்கி வைக்கிறேன் எனக்குள். இது எனக்கு வாடிக்கையாகிப் போய்விட்டதடி..!

வேறு என்ன விசயம்?? இப்ப கொஞ்ச நாளா எனக்கு கண்டறியா வயித்துவலி ஒண்டு தொடங்கியிருக்கு,, முதலில் சும்மா வலியாக்குமெண்டு அசட்டையா இருந்தேன். ஆனால் இப்ப அது எந்த வலி போக்கும் மாத்திரைக்கும் அடங்க மாட்டன் எண்டுது.. நாளை அல்லது நாளண்டைக்கு ஒருக்கால் எமர்ஜென்ஸி போய்ப் பார்க்க வேணும்..!

மிகுதியை அடுத்த கடிதத்தில் எழுதுறன்.


"Each friend represents a world in us, a world possibly not born until they arrive, and it is only by this meeting that a new world is born."
- Anais Nin


இப்படிக்கு

அன்பு மறவாத தோழி

சாந்தா.

வெள்ளி, 23 ஜூலை, 2010

அஞ்சல்- 3

01.10.2005
01.10.2005
அன்புள்ள சிவசோதிக்கு!

நலமாக இருக்கிறாயா??

நேற்றைக்கு என்னுடைய அம்மாவின் பிறந்த நாள். இன்றைக்கு என்னுடைய மருமகனாரின் ஹோம் கம்மிங்.. என்ன யோசிக்கிறாய்?? இந்த மாதம் (தை மாதம்) 7ம் திகதி பாலாவுக்கும் பிரேமாவுக்கும் ஆண்குழந்தை பிறந்திருக்கிறார். சிசேரியன் தான் இவரும். குழந்தையை இன்றைக்கு தான் ஆசுபத்திரியிலிருந்து வீட்டுக் கொண்டு வரப் போறம். அதான் அவரை வரவேற்க அவருடைய அறையை அலங்காரம் செய்து வைச்சுட்டு, ஆலத்தியும் ஆயத்தப்படுத்திவிட்டு வந்து இந்த கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன்.

பிள்ளைக்கு நிஹாஷன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் என்னிடம் கேட்காதே.. அது பிரேமாவின் தங்கைமார் தேர்வு செய்தது. என்னிடம் கேட்டார்கள் . நான் புராணம் , இதிகாசமெல்லாம் தேடி , ஒரு பட்டியல் போட்டு குடுத்தேன். ஆனால் ஸ்டைலிஷான பெயராக இல்லை அவை என்பதால் நிஹாஷன் என்ற இந்தப் பெயரை பிரேமா தேர்வு செய்திருக்கிறா. பிள்ளையை பெற்றவர் என்ற வகையில் பிரேமாவுக்கு தான் முன்னுரிமை அதனால் இதில் எந்த விமர்சனமும் எனக்கு இல்லை. ஏன் என்றால் இதே கதை தான் என் விசயத்திலும் நடந்தது,

நான் பல வருசக் கணக்காகவே மனதுக்குள் உருப்போட்டு வைத்திருந்த பெயர் அஷ்வத்தாமா! எனக்கு அந்த கதாபாத்திரத்திலும் சரி, அந்த பெயரின் அர்த்தத்திலும் சரி அத்தனை ஈர்ப்பு. ஆம்பிள்ளைப் பிள்ளை எனக்குப் பிறந்தால் அஷ்வத்தாமா தான் பெயர். இரண்டாவதாய் இன்னொரு பெயர் நான் தேர்வு செய்து வைக்கவே இல்லை. என்னுடைய பிராணநாதருக்கு மஹாபாரதமென்றால் 5 சகோதரர்களும் சேர்ந்து 100 ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் போட்ட சண்டை என்ற அவுட்லைன் மட்டும் தான் தெரியும்,. மஹாபாரதத்தின் கிளைக்கதைகள் எதுவும் தெரியாத வெள்ளந்தி. :):) அவர் அஷ்வத்தாமா என்ற பெயரைச் சொன்னதும் மிரண்டு போனார்..

அமெரிக்காகாரனுக்கு கம்பியூட்டரில் நிரப்ப இலகுவாக இருக்க வேண்டுமென்பதற்காக எங்கட ஆட்கள் பிள்ளைகளின் பெயரை 4 அல்லது 5 எழுத்துகளுக்குள் வாற மாதிரி தான் வைக்க விரும்புவினம்.

அப்ப என்ர மனுசனும் முதலில் உந்தப் பெயரை இங்கத்த சனங்களால உச்சரிக்க முடியாது..எதுக்கு இந்த கிழட்டு பெயர் அது இது எண்டு முரண்டு பண்னினார். நான் எதையும் காதில் போடவில்லையே. பேர் வைச்சது வைச்சது தான். வயிற்றில் என்ன பிள்ளை என்று ஸ்கான் பண்ண முன்னமே அது அஷ்வத்தாமா தான் வந்திருக்கிறார் என்று சொல்லிவிட்டே னே . பிள்ளை உதைக்கிற நேரமெல்லாம் அஷ்வத்தாமா குளப்படி செய்யக் கூடாது.. என்றெல்லாம் பிள்ளையோடயே கதைச்ச எனக்கு மற்றவை சொல்லினம் எண்டு பேரை மாத்துவனா என்ன??

தேவன் என்னோடு பந்தயம் கூட கட்டினவர் முதல் பிள்ளை பொம்பிள்ளைப் பிள்ளை தானென்று. பிள்ளைக்கு சட்டைகள் தைப்பதற்கு கூட பிங் கலரில் தான் துணி மணி எல்லாம் வாங்குவார்.. நான் தான் சண்டை பிடிச்சு நீல நிறத்தில் வாங்கினேன். ::):) பாவம் தேவனுக்கு பொம்பிள்ளைப் பிள்ளை தான் விருப்பம். ..!

பிள்ளை பிறந்த பிறகு அவருடைய சொந்தக்காரர் பிள்ளைக்கு என்ன பெயர் வைச்சனீர் என்று என்ர பிராணநாதரை கேட்டால் “அது என்னமோ அருச்சுனனுக்கு வில்வித்தை சொல்லிக் குடுத்த மாஸ்டர் துரோணராம். அவரிண்ட மகன் பெயராம் அஷ்வத்தாமாவாம் எண்டு கொஞ்ச நாளா வியாக்கியானம் பாடிக் கொண்டிருந்தார். அஷ்வத்தாமா எண்டு கூப்பிட கஷ்டம் எண்டு பேபி எண்டு செல்லப் பெயர் வைச்சு கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இப்ப...

பெடியன் வளர்ந்து உந்தப் பெயரை மாத்தி வைக்காட்டில் என்ர பேரை நான் மாத்தி வைக்கிறன் என்று பாலா நக்கல் அடிக்கிறார்.

ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு அஷ்வத்தாமா என்றால் யார் என்று சொல்லி, அந்த பெயரின் அர்த்தத்தையும் விளக்கப்படுத்தினால் என்ர பிள்ளை பெருமைப்படுவாரே தவிர அயர்ச்சியடையமாட்டார் என்று..

இப்ப பிரேமாவுக்கும் என்னுடைய நிலை தான், என்னவோ எல்லாரும் தங்கட பிள்ளைகளுக்கு ஏதோ அர்த்தமா வைச்சது போலவும், காரண காரியங்களோட தான் பிள்ளைகளுக்கு அவை பெயர் வைச்சது மாதிரியும் பிரேமாவிண்டம் “நிகாஷனோ?? அதென்ன புதுசா விண்ணானமா ஒரு பேர்?? என்ன அர்த்தம் உந்தப் பேருக்கு?” என்று கேள்வியள் வேற.. உந்தப் பேரை சரிக்கட்ட அவள் எத்தனை முனை போராட்டம் எடுத்திருப்பாள் எண்டு அவளுக்கு தான் தெரியும். பிள்ளை பிறந்த நேரக் குறிப்பை வைச்சு ந, நி வரிசையில் பெயர் தொடங்க வேண்டும், எண் சாத்திரப்படி 7ம் நம்பருக்குள் கூட்டி வர வேணும். ஸ்டைலா மொடர்னா இருக்க வேண்டு ம்...இதெல்லாம் பார்த்து முடிச்சால்...அர்த்தமாவது ஒன்றாவது..! :):)

எனக்கு சாத்திரம், குறிப்பு, எண் சோதிடம் எதிலும் நம்பிக்கையில்லை; அக்கறையுமில்லை; பெயர் நல்ல பெயராக இருக்க வேண்டும். எனக்குப் பிடிச்ச பெயராக இருக்க வேண்டும். அவ்வளவு தான்!! அதே போல பிரேமாவுக்கு தன்ர பிள்ளையின் பெயர் ஸ்டைலா இருக்க வேண்டும் எல்லா சாத்திரங்களோடயும் பொருந்தி வாறமாதிரி இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி..எந்த மாதிரியா இருந்தாலும் ஒரு பிள்ளையின் பெயரை தேர்வு செய்யும் முழு உரிமையும் அந்த பிள்ளையின் தாய்க்கு தான் இருக்கு.. மற்றவர்களை விட தாய் தான் அதிகமாக தன் பிள்ளையை பெயர் சொல்லி கூப்பிடப் போகிறாள். தங்கம், செல்லம், முத்து , பவளம் எண்டு சொந்த பெயரோடு ஆயிரமாயிரம் செல்லப் பேர் வைத்து அந்தக் குழந்தையை தாயைப் போல வேற யார் கொஞ்சப் போகினம்?? அதனால் பிரேமாவின் உரிமையில் தலையிடவோ, குறை சொல்லவோ நான் தயாராக இல்லை.

எப்படியோ எனக்கு மூத்த மருமகன் பிறந்து இன்றைக்கு வீட்டுக்கு வாறார். எங்கட குடும்பமும் பெரிதாகி, புது புது உறவுகளின் வருகையோடு இன்னொரு சந்ததி தொடங்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கும் போது மனதுக்கு கொஞ்சம் சந்தோசமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் பார்த்து சந்தோசப்பட அப்பாவும் , அம்மம்மாவும் இல்லையென்ற கவலையும் கூடவே வருகிறது.

உனக்கு எத்தனி பிள்ளைகளடி? அவர்களுக்கு என்னென்ன பெயர்? எத்தனை ஆம்பிள்ளைப் பிள்ளை? எத்தனி பொம்பிள்ளைப் பிள்ளை ? இதெல்லாம் அறிய ஆவலாய் இருக்கிறது..ஆனால் அறியும் வழி தான் புலப்படவில்லை. :(
வாழ்க்கையில் எத்தனையோ நல்ல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் அனுபவிக்க இயலாமல் இந்த புலம்பெயர்வு அமைந்திருக்கிறது என்று எனக்கு இப்ப தான் உறைக்கிறது. ஊரில் என்றால் எல்லா உறவுகளும் சுற்றமாக கிட்டக் கிட்டவா இருந்தம். இப்ப திக்குக்கு ஒன்றாய் தேசத்துக்கு ஒன்றாய் சிதறிப் போயிருக்கிறோம். நான் தூக்கி வளர்த்து, ஒவ்வொரு கணமும் கொஞ்சி கொஞ்சி விளையாட வேண்டிய உன்னுடைய பிள்ளைகளையோ வசந்தாக்கா, குமா அண்ணாவின் பிள்ளைகளையோ என்னாலும் நீங்கள் எல்லாரும் இருந்து சீராட்டி , தாலாட்டி , சீர் செய்து முறை செய்து பார்க்க வேண்டிய என் பிள்ளையை உங்களில் யாருக்கும் கூட நேரில் பார்க்க முடியாத அவலத்தை பார்.. ஏன் இப்பிடி ஒரு வரம் வாங்கி வந்தனாங்களோ ..தெரியேலை.. :(

சரி.. இண்டைக்கு இவ்வளவும் போதும்.. இன்னும் மருமகனாரை காணவில்லை. என்ன விசயமென்று ஒருக்கா போன் பண்ணி பார்ப்பம்.. வேற என்னடி?? மிச்சத்தை அடுத்த கடிதத்தில் தொடருறேன்

. "A hug is worth a thousand words. A friend is worth more."


இங்ஙனம்

அன்புமறவாத தோழி

சாந்தா.


. .


ஞாயிறு, 18 ஜூலை, 2010

அஞ்சல் - 2



ஜனவரி 6, 2005

அன்பு மறவாத தோழி!

இப்ப நீ என்ன செய்து கொண்டிருப்பாய் என்று நினைத்துப் பார்க்கிறேன். இப்ப என்றால் இந்த நிமிடத்தில், இந்த வினாடியில் உலகின் ஏதோ ஒரு பகுதியில், நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் அதே நிமிஷத் துளியில் நீ என்ன செய்து கொண்டிருப்பாய் என்று யோசிக்கிறேன்.

நீ ஈழத்தில் தான் இன்னமும் இருக்கிறாய் என்றால் இப்போது அங்கு இரவுநேரம். அநேகமாக நித்திரைக்குப் போயிருக்க வேண்டும். வெடிகுண்டுகளோ, துப்பாக்கிச் சத்தங்களோ இன்றிரவு அங்கு வெடிக்காமல் இருந்தால் ..ஆமிக்காரங்கள் சோதனை என்ற சாக்கில் வீடுகளுக்குள் பூராமலிருந்தால் , நெஞ்சு படபடக்க - பயத்தோடு , கடவுள் என்ற ஒருத்தனிடம் காப்பாற்றச் சொல்லி மனதுக்குள் இறைஞ்சிக் கொண்டு, எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாதேயென்ற கிலியில்லாமல் நீ தூங்கிக் கொண்டிருப்பாயா? இன்றைய சூழலில் முடிகிறதா உன்னால்? அல்லது தூங்கமலே விழித்துக் கொண்டிருக்கிறாயா?? இவையெல்லாம் உனக்கு பழகிப் போயிருக்குமோ?? பீதியும் , கிலியும் , கவலையும் கூட புழக்கத்திலிருப்பதும், பழகிப் போவதும் கூட ஒரு வேதனையான விந்தை தான் இல்லையாடி??

உன் அப்பா, அம்மா, அண்ணா, தம்பி செந்தில், தங்கச்சி நந்தினி என்று ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்க்கிறேன். உன் சித்தப்பாவையும், உன் பக்கத்துவீட்டு சிநேகிதி வள்ளியையும் கூட என்னால் மறக்கமுடியவில்லை. அப்பாவுடன் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் போன போது பரந்தனில் உன் வீட்டுக்கு வந்த அந்த நாள் கூட நினைவில் இருக்கிறது. அன்றைக்கு தானே முதன் முதலாக இட்லியே நான் சாப்பிட்டேன்?? :) அப்போது உன் வீட்டில் உன் அம்மம்மாவும் இருந்தார். உன் வீட்டுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்த அந்த சின்ன நீரோடையும், மரங்களும், சுத்தமான காற்றும்...கூட இப்போது நினைத்தாலும் ஆசையாக இருக்கு ..இன்னொருக்கா பார்க்கமாட்டேனா என்ற பரிதாபமான ஏக்கம் அடிக்கடி மனதுக்குள் ஓடுவதும், ப்ச் என்று வெறுமையான சப்புக் கொட்டுதலும் எனக்கும் பழகிவிட்டது.

உன்னுடைய நினைவுகளில் உனக்கு அடுத்தாற் போல் உன் அண்ணா தான் கண்ணுக்குள் நிற்கிறார்.எல்லோரையும் விட .. அடிக்கடி அவரைத் தானே உன் குடும்பத்தார்களில் சந்தித்திருக்கிறோம். அது மட்டுமல்ல அவரைப் பற்றியே நீ எப்போதும் பேசிக் கொண்டிருந்ததாலும் , எனக்கும் அண்ணன் இல்லாத ஆதங்கத்தினாலும் உன் அண்ணா என் ஞாபகடுகளில் விஷேசமாக பதிந்து போனார் என்று நினைக்கிறேன்.

அவருக்கு தான் எத்தனை அன்பு உன் மேல்?? கண்ணும் கருத்துமாக கவனிப்பார் உன்னை?? உன் கால் சப்பாத்து வார் கழன்றால் கூட அவர் குனிந்து பூட்டி விட்ட அந்த அன்பையும், கவனிப்பையும் பார்த்து நான் அதிசயப்பட்டிருக்கிறேன்.. நீ கொடுத்து வைத்த தங்கை என்று நினைத்துக் கொள்வேன் அப்போதெல்லாம்.

இப்போது அந்த அன்பான அண்ணாவுக்கும் திருமணம் நடந்திருக்கும். மனைவி, குழந்தைகள் என்று அந்த அண்ணாவும் குடும்பஸ்தராகியிருப்பார். உன் தம்பி செந்தில் கூட குடும்பஸ்தராயிருப்பார்.. ஆனால் உன் தங்கை நந்தினி....??? நந்தினியைப் பற்றியும் உன்னைப் பற்றியும் அறிந்து கொள்ளத் தான் மனம் அடித்துக் கொள்கிறது..:((:(

உனக்கு நினைவிருக்கோ எனக்கு தெரியாது ஆனால் எனக்கு நல்லா நினைவிருக்கு..உன் தங்கை நந்தினியை என் தம்பி செல்வாவுக்கு சோடிப் பொருத்தம் நல்லா இருக்கெண்டு அடிக்கடி நானும் நீயும் சொல்லிக் கொள்வது..இவையள் ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று அடிக்கடி சொல்வாய்.. எனக்கு அந்த திட்டம் பிடித்தது நானும் நீயும் அந்த உறவு முறையில் இணைபிரியாமல் எதிர்காலத்திலும் இருக்கலாமே என்று..!

அவரவர் வாழ்கையின் திசைகள் எப்படியெல்லாம் மாறிப் போகுமோ என்ற யோசனையே நமக்கு அப்போது இருந்ததில்லையே...என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று எனக்கு புரியவில்லையடி! அந்த பாடசாலைச் சுவர்களுக்குள்ளான உலகமும், அதற்குள்ளான எட்டுவகை பாடப் புத்தகங்களின் பக்கங்களுக்குள்ளேயே வட்டமிட்ட வாழ்கையின் எல்லையும், அதற்கேற்ற பக்குவத்துக்கான எண்ணங்களும், கனவுகளும் ...

அவற்றைத் தவிர என்ன தெரிந்து வைத்திருந்தோம்?? எதுவுமேயில்லை.. இவையெல்லாவற்றையும் கடந்த ஒரு உலகம் கோரமான முகங்களோடு அடித்துப் போட காத்திருக்கிறது என்ற சுரணைகள் உணராத காலம் அது... !

அந்த நாட்களில் பிரிய நேரிடலாம் என்ற நினைப்பைக் கூட ஏதோ ஒரு நம்பிக்கையில் பிரியவே மாட்டோமென்ற உறுதியுடன் அலட்சியம் செய்த பருவகாலம் அது...!

அப்போது எங்களுக்கு ஜாதி என்றால் என்னவென்ற அக்கறையே இருந்ததில்லை. பிரிவினை என்ற கோடு கண்ணுக்கு தெரிந்ததேயில்லை. எல்லாவற்றையும் விட நட்பில் வித்தியாசங்கள் ் , வேற்ய்பாடுகள் தெரியாது,. ஒற்றுமை, மற்றவர்களிடம் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் அத்தனை அந்நியோன்னியம். இந்த அன்னியோனியம் எனக்கு என் பிராண நாதரிடம் கூட இருக்கிறதா என்று அடிக்கடி என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. அந்தப் பருவத்தின் பக்குவம் கூட ஒருவகையில் கபடமில்லாத அழகான அறியாமையுடனான து தான்.

அந்த அறியாமையுடனேயே இருந்திருக்கலாம் என்று மனம் இப்போதெல்லாம் பேராசைப்படுவதை தடுக்கமுடியவில்லை.. வாழ்கையின் வ்லிகளை சந்தித்து சந்தித்து ரணமான பாதங்களுடனான இந்த பயணத்துடன் ஒப்பிடும் போது அந்த அறியாமை எவ்வளாவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது.

அப்போதெல்லாம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி என்ற அந்த கட்டிடச் சுவர்களுக்குள்ளாலான உலகமும், என் வீடும், உன்னோடான நட்பையும் தவிர்த்து அவற்றைக் கடந்த வேறொரு உலகத்தைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில் எனக்கு ஆர்வமிருந்ததில்லை அல்லது அறிந்து கொள்ள அஞ்சினேன் என்று சொல்லலாம். உனக்கும் அப்படியிருந்ததா என்று நான் தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

அந்தக் நாட்களில் எனக்கான எதிர்காலத்தின் கற்பனைகளில் கூட உன்னைப் பிரியக்கூடாது என்ற உறுதியும், பிரிய மாட்டேன் என்ற நம்பிக்கையும் இருந்ததே..?! எங்களையும் விட எங்கள் வாழ்கையின் முடிவுகளை எடுக்கப் போகும் எங்கள் வீட்டுப் பெரியவர்களைப் பற்றிய பிரக்ஞை ஏன் அப்போதே எனக்கு உறைக்கவில்லை என்று நினைத்தால் வேதனையான வேடிக்கையாக இருக்கிறது இப்போது.

டொக்டராக வேண்டுமென்ற என்னுடைய கனவு போலவே உன்னை பிரியக் கூடாது என்ற கனவும் எதிர்பார்ப்பும் கானலாகிப் போய்விட்டது. இந்த இரண்டு கனவுகளினது தோல்விகளையும் மனதில் ஆழமாகப் புதைத்துவிட்டு இயலாமையை பழகிக் கொண்டுவிட்டேன். இதனால் எதையும் நான் சாதித்துவிடவில்லை..எதையும் சமப்படுத்தவுமில்லை. எந்த வகையிலும் நினைவுகளை சமாதானப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் அந்த இயலாமையும் புதைத்துவிட்ட நினைவுகளும் மனதை ஊடுருவிக் கிழிக்கும் முள் சுமந்த வேர்களாக படர்ந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது .

எங்காவது ஏதாவது பாடசாலைகளின் பெயரில் பழைய மாணவ மாணவிகளின் ஒன்றுகூடல் பற்றிய செய்திகளை படிக்கும் போது எனக்குள் பெருமூச்சு தான் எழுகிறது. இணையத்தில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஒன்று கூடல் கூட கனடாவில் நடக்கிறது ..:( ஆனால் எனக்கு தான் எங்கும் போக முடியாமல் இருக்கிறேன், இன்னமும் என்னுடைய கிரீன் கார்ட் வராததினால்...ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு விதமான தடைகளும், இயலாமையும் அவற்றை புறந்தள்ளவியலாத வாழ்வுமாக....எத்தனை இருந்து என்ன என்ற சலிப்பை தருகிறது.

சரி விடு... போன அக்டோபர் 16ம் திகதி என் மகன் அஷ்வத்தாமாவுக்கு முதலாவது பிறந்த நாள். வீட்டுக்குள் எங்கட குடும்பத்தாரோடு கொண்டாடினோம். இன்னொரு நாள் பிறந்த நாள் பார்ட்டியை வைக்கலாமென்று விட்டுவிட்டோம். அது அப்படியே நாள் கடந்து கடந்து போய்விட்டது பல காரணங்களால். கடைசியில் ஓரளவு எங்களுக்கு இயலுமான அளவில் ஒரு ஹால் கிடைத்து இந்த ஜனவர் 2ம் திகதி தான் நடத்தினோம். அண்டைக்கே என்ர தம்பி பாலாவின் மனைவிக்கு பேபிஷவரும் நடத்தி முடிச்சன். அந்த விபரங்களை பின்னாளில் விபரமாக எழுதுறன். எனக்கு நிறைய எழுத விருப்பம் தான்.. ஆனால் கை வலிக்குதடி.. உனக்கும் இந்த பென்னம்பெரிய கடிதம் வாசிச்சால் களைப்புத் தான் வரும்.. அதனால் இதை இத்தோடு முடிக்கிறன்..

"A friend is one who walks in when others walk out"

-Walter Winchell


இங்ஙனம்

அன்புத் தோழி

சாந்தா.

வியாழன், 15 ஜூலை, 2010

அஞ்சல் - 1



01.01.2005

அன்புள்ள தோழி சிவசோதிக்கு!

புது வருட வாழ்த்துகள்!

இதை எழுதத் தொடங்கும் 2005ம் ஆண்டின் முதலாம் நாளான இன்று நான் நலமாயிருக்கிறேன். இன்னும் எத்தனை காலத்துக்குப் பிறகு நீ இந்தக் கடிதங்களைப் பார்க்கப் போகிறாயோ எனக்குத் தெரியவில்லை. இவற்றையெல்லாம் நீ படிக்கும் சந்தர்ப்பம் இல்லாமலே போய்விடுமோ என்பதும் கேள்விக்குறியே! ஆனாலும் அறிவு கேட்கும் இந்தக் கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு நான் உனக்குக் கடிதங்களை எழுதத் தான் போகிறேன். நிறைய எழுதுவேன்... இந்தக் கடிதங்களை நீ எப்போது படிக்கப் போறீயோ அன்று நீயும் நலமா?

முன்பு எனக்கும் உனக்கும் இடையிலான நட்பு தொடங்கிய நாட்களிலிருந்து உனக்குத் தெரியாமல் எது என் வாழ்கையில் நடந்திருக்கிறது? உன்னுடைய வாழ்கையில் தான் என்ன நடந்தது நானறியாதது..? ஆனால் இன்றைய சூழலில் இத்தனை வருட காலத்தில் உன் வாழ்கையில் என்னென்ன நடந்தன என்று எனக்கு தெரியாமலே போய்விட்டது. இன்ன இன்ன நடந்தன என்று சிலர் சொன்ன கொடுமையான செய்திகள் கூட உறுதிப்படுத்த முடியாதவையாக இருக்கின்றன. அவை உறுதிப்படுத்தப்படாமல் இருக்கும் வரை தான் நானும் என்றாவது நீ இவற்றைப் படிப்பாய் என்ற நம்பிக்கையுடன் இக் கடிதங்களை உனக்கு எழுதலாம். என்னைப் பற்றியோ, என் வாழ்கையில் நடந்தேறியிருக்கும் சம்பவங்கள் பற்றியோ நீ அறிந்திருக்க வாய்ப்புக் கிடைத்ததா? எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்பா இறந்தது, நாங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்தது, என்னுடைய வாழ்கையில் தேவகுமார் என்ற புது மனிதர் வந்தது, எனக்குக் கல்யாணம் நடந்தது, பாலாவுக்குக் கல்யாணம் நடந்தது, எனக்கு பிள்ளை பிறந்தது என்று ஏதாவது அறிந்தாயா? தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருந்தால் இந்தத் தகவல்கள் சொன்னவர்களிடம் எம்மை தொடர்பு கொள்ள விலாசமோ, தொலைபேசி எண்ணோ வாங்கியிருக்க மாட்டாயா? அல்லது எனக்கு உன்னைப் பற்றி தகவல்கள் சொன்னவர்களிடம் உன்னுடைய சரியான விலாசமோ அல்லது தொலைபேசி இலக்கமோ என்னால் எடுக்க முடியாதது போல் உன்னாலும் முடியாமல் போயிருக்குமோ என்னமோ?

உனக்கு எப்பவோ கல்யாணம் நடந்திருக்கும். பிள்ளைகள் பிறந்திருப்பார்கள். பெரிசாக வளர்ந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். உன் கணவர் யார்? அவர் என்ன தொழில் செய்வார்? இப்போது நீ எங்கிருக்கிறாய்? எதுவுமே எனக்குத் தெரியாது. நான் 1991ம் ஆண்டு மும்பாயில் நின்ற போது பரந்தனைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன். அவர் உங்கள் குடும்பத்தில் எல்லோரையும் தெரிந்து வைத்திருந்தார். ஆனால் அப்போது அவருக்கு ஊரின் நிலமை தெரிந்து கொள்ளக்கூடிய வசதியிருக்கவில்லை. யாரும் ஊரில் இருந்து வருபவர்கள் மூலம் தான் அவருக்கும் ஈழத்து நடப்புகள் பற்றித் தெரிய வருமாம். அப்படி யாரோ ஒருவர் மூலம் ஏதோ கேள்விப்பட்ட செய்தியாகத் தான் உன்னைப் பற்றிய செய்தியையும் சொன்னார். "இந்திய இராணுவம் சின்னைய்யரிண்ட ரெண்டு மகள்மாரில ஒரு மகளை சுட்டதில பெட்டை செத்துப் போச்சுது". எந்த மகள் என்ற விபரம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அது மட்டுமல்ல இதில் எந்தளவு உண்மை இருந்தது என்று அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது சிவசோதி! ஆனால் அந்தச் செய்தி கேட்டு இரண்டு மூன்று நாட்கள் என்னால் சாப்பிட முடியவில்லை. அறைக்குள்ளேயே கிழமைக் கணக்கில் முடங்கிக் கிடந்தேன்.

அதே நபர் தான் "சின்னையாவின் ஒரு மகள் செத்துப் போச்சுது. இன்னொரு மகள் ஜேர்மனியில் இருக்கிறா" என்றும் சொன்னார். அதுவும் உண்மையா என்பதும், எந்த மகள் அங்கிருப்பது என்பதும், அந்த மகளின் முகவரியும் கூட தெரிந்திருக்கவில்லை. இதே போல் இன்னொரு தடவை அமெரிக்காவில் ஒரு பிறந்த நாள் விழாவில் அருள்நங்கை என்ற பெண்ணை சந்தித்தேன். "நீங்கள் சுண்டிக்குளியில் படிச்சனீங்களெல்லா? லிட்டரி மீட்டீங்கில் பாட்டுப் பாடுவீங்களெல்லா?" என்று என்னை வந்து விசாரித்த அந்தப் பெண்ணை எனக்குத் தெரிந்திருக்கவில்லை யார் என்று. பத்தாம் வகுப்பில் "C" கிளாசில் படித்தவராம். எனக்கோ அந்தப் பிள்ளையைப் பார்த்த நினைவே இல்லையடி. ஆனாலும் பழைய பள்ளிக்கூடத்துப் பிள்ளையென்றதும் அவருடன் இருந்து உரையாடினேன். எல்லாரைப் பற்றியும் சொன்னார். நீ சொன்ன மாதிரியே அனோஜா தேவரூபினியின் அண்ணாவைத் தான் கலியாணம் செய்திருக்கிறா. இப்ப கனடாவில் இருக்கினமாம். மீனலோஜனி டொக்டராம். கொழும்பில் வேலையாம். கேசவவதனியும் முரளியும் கொழும்பிலாம். அவளுக்கு 2 பொம்பிளப் பிள்ளையளாம். இவ்வளவும் சொன்ன அருள் தான் சொன்னா "நீயும் கொழும்பில் ஏதோ நர்ஸிங்ஹோமில் நர்ஸா இருக்கிறாய் என்று..." ஆனால் நர்ஸிங்ஹோமின் பெயரோ தொலைபேசி எண்ணோ அருளிடமிருந்து கிடைக்கவில்லை. அது என்ன உன்னைப் பற்றிய தகவல்கள் மட்டும் இப்படி எனக்கு மொட்டையாவே கிடைச்சுக் கொண்டிருக்கெண்டு தான் எனக்கு விளங்கேலை.

இப்பவும் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் எனக்கு உன்னைப் பற்றிய எந்த விபரமும் தெரியவில்லையடி. நான் கேட்காமலே அனோஜாவின் கனடா போன் நம்பரை கொடுக்க முடிந்த அவரால் உன்னுடைய நம்பரையோ விலாசத்தையோ தர முடிந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நினைச்சு கவலைப்பட்டன். அனோஜாவுடன் எடுத்து கதைக்க என்ன இருக்கு என்ற சலிப்பு வந்தது என்னவோ உண்மை தான். ஆனால் உன்னைப் பற்றி ஏதாவது தகவல்கள் கிடைக்கலாமே என்ற நப்பாசையுடன் போன் எடுத்தேன். எதுவும் கிடைக்கவில்லை. தேவரூபினியின் அம்மாவுடன் கதைக்க முடிந்தது. அங்கிள் அந்த டிசம்பரில் தான் செத்துப்போனார் என்று அன்ரி சொன்னார். நாங்கள் சந்தேகப்பட்டது போல் தேவரூபினியின் அண்ணாவுக்கும் அனோஜவுக்குமிடையில் காதல் தான் கல்யாணத்தில் முடிந்திருக்கு. இல்லாட்டில் லண்டன் போன அனோஜா அடுத்த மாசமே மெடிக்கல் எண்டரன்ஸை சாட்டிக் கொண்டு திரும்பி யாழ்ப்பாணம் வந்திருப்பாவே? :) வந்தும், மெடிக்கல் படிச்சும் பாரன்.. கடைசில கனடா வந்து பார்மஸிஸ்ட் தான். ஏன் மெடிக்கலை தொடராமல் விட்டிச்சு எண்டு தான் விளங்கேலை. ஆனால் போனில் அதைக் கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை.

இண்டைக்கு புது வருசம்..இண்டையிலிருந்து உனக்கு என்னால் முடியும் நேரங்களிலெல்லாம், எனக்கு உன்னோடு கதைக்க வேண்டுமென்று தோன்றுகிற நேரங்களிலெல்லாம் இந்த ஜேர்னலில் கடிதம் எழுதப் போகிறேன். இந்த ஜெர்னலை வாங்கி மாசக் கணக்காகிறது. ஆனால் இன்றைக்கு தான் எழுதத் தொடங்குகிறேன். எதற்கும் ஒரு தொடக்கம் இருக்கத் தானே வேண்டும்? இந்தத் தொடக்கம் உனக்கும் எனக்குமிடையிலான கால, தூர இடைவெளிகளை கடிதங்களால் நிரப்ப நான் எடுக்கும் முயற்சிக்கானது. இந்தக் கடிதங்களை நீ படிக்கப் போகும் அந்த நிமிடம் தான் எமக்கிடையிலான இடைவெளியை அகற்றப் போகும் நேரம். அதுவரை எனது முயற்சிகள் பாதிக் கிணறு தாண்டிய நிலையில் தான்.

இவள் ஏன் கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறாள் என்று நீ நினைக்கலாம். ஒவ்வொரு வினாடியும் உன் நினைவாகவே இருந்தேன் என்று எவராவது எவருக்காவது சொன்னால் என்னைப் பொறுத்தவரை அது பச்சைப் பொய். பழைய நினைவுகள் ஏதோ ஒரு காரணத்தால் அல்லது ஏதோ ஒரு தூண்டுதலால் அல்லது ஏதோ ஒரு சூழ்நிலையில் குளத்தின் அடியிலிருந்து "குபுக்" என்று எழும்பும் நீர்க் குமிழ் போல் மனதினடியிலிருந்து சட்டென்று வெடிக்கும். அந்த வெடிப்பின் தாக்கம் ஒரு கணத்தில் மறைந்து போகக் கூடும் அல்லது பல நாட்கள் அப்படியே அழுத்திக் கொண்டிருக்கவும் கூடும். சட்டென்று ஏதோ ஒரு காரணத்தாலோ அல்லது ஏதோ ஒரு விளைவாலோ உன்னைப் பற்றி நினைவு வரும் போது மனசு மிகவும் கனத்துப் போகிறது சிவசோதி. பல சமயம் என்னோடு எனக்கு பக்கத்திலோ அல்லது நினைத்தவுடன் உன்னோடு பேசக் கூடிய வசதியோ இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று தோன்றும். சில நேரம் ஏதாவது சம்பவங்கள் நிகழும் போது "அட இந்த நேரம் அப்பா இங்க இருந்திருந்தால் நல்லா இருக்கும்" என்றோ வேறு சில நேரங்களில் "சிவசோதி இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் "என்றோ மனசு ஏங்கும். அந்த மாதிரியான தருணங்களில் உனக்கு நான் சொல்ல முடியாமல் போனவற்றை, நீயிருந்திருக்க வேண்டுமென்று நான் விரும்பிய சந்தர்ப்பங்களைப் பற்றி அப்பப்ப எழுதி வைக்க கடித வடிவம் தான் எனக்கு தோதுப்பட்டது.

நான் இப்ப என்னுடைய சொந்த வாழ்கையைப் பொறுத்தவரை சந்தோஷமாகத் தானிருக்கிறேனடி. ஆனால் நான் சந்தோசமாய் இருக்கிறேன் என்பதை உனக்குத் தெரிவிக்க முடியவில்லையே என்ற கவலையுடன் இருக்கிறேன். நீ சந்தோசமாயிருக்கிறாயா எனறு அறிய முடியாத கவலையோடு நானிருக்கிறேன். "கட்டாயமாக நீ சந்தோசமாய் தானிருப்பாய்; சந்தோசமாயிருக்க வேண்டுமென்ற நினைப்போடு நானிருக்கிறேன். நான் இப்படி உன்னைப் பற்றி நினைப்பது போல நீயும் என்னைப் பற்றி நினைக்கிறாயா என்று அடிக்கடி நினைத்தபடி நானிருக்கிறேன். என்னை மறக்குமளவுக்கு உன் மனநிலை மாறியிருக்காது, அல்லது என்னை மறக்கடிக்குமளவுக்கு உனக்கு எந்த அசாதாரணமும் நிகழ்ந்திருக்காது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு நானிருக்கிறேன்.

எவ்வளவு தான் சந்தோசமாக இருந்தாலும் வாழ்கையில் அவ்வப்போது வெறுமையாக உணரும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது. என்ன இல்லை என்று இந்த வெறுமை? எந்தக் கவலையின் விம்பமாய் இந்த வெறுமை என்று புரியாத குழப்பம்.

விருப்பப்பட்ட வாழ்க்கைத் துணை, வேலைக்கு போகாமல் வீட்டிலிருக்கிறேன். அதுவும் ஒரு வகையில் குறை தான். ஆனாலும் அதே நேரம் இயந்திரத்தனமாக தினமும் வேலைக்கு போய், வீட்டு வேலை செய்து மாய்ந்து, ஓய்ந்து போகும் பரிதாபத்துக்குரிய பெண்ணாக இல்லாமல் பிள்ளையோடும், கணனியோடும், என் எழுத்துகளோடு கோலோச்சும் பெண்ணாக பொழுது போகக் கிடைத்து வைத்ததில் திருப்தி தான். ஆனாலும்.... ஏதோ ஒரு வெறுமை மனதில் நிழலாக படர்ந்து கொண்டு தானிருக்கிறது.

ஒரு வகையில் பழைய யாழ்ப்பாண வாழ்க்கைக்கான ஏக்கம் கூட இந்த வெறுமைக்குக் காரணமாக இருக்கலாம், அந்த ஏக்கம் எப்பவும் யேசு நாதரை சிலுவையில் அடித்த ஆணியின் கூர்மை கொண்ட வலியாக மனதில் துருத்திக் கொண்டு தானிருக்கு. ஊரை விட்டு வந்து இருவது வருசங்களுக்கு மேலாகினாலும் மனம் மட்டும் இன்னமும் அங்கேயே நிற்கிறது. இது தான் அந்த வெறுமைக்கு காரணமோ தெரியவில்லை.

என்ன விஷயமென்றாலும் சொல்வதற்கு, பக்கத்திலிருந்து பகிர்ந்து கொள்வதற்கு ஆளே இல்லாமல் இருக்கிறேன் என்பது மட்டும் சத்தியம். இருக்கினம் தான் சிநேகிதிகள் என்ற பெயரில் இரண்டு மூன்று பேர் இங்க. ஆனால் யாரோடும் ஒளிவு மறைவு இல்லாமல் கதைக்க முடியாது. அவரவர்க்கு அவரவர் குடும்பம். தங்கள் தங்கள் தேவைகளுக்காக மட்டும் போனில் கூப்பிட்டு கதைத்து பேசும் அறிமுகங்களாக மட்டுமே தமக்குள் எல்லைகள் வரித்த சிநேகிதிகள். "சாந்தாக்கா எங்கட பார்ட்டிக்கு வந்து நிண்டு உதவி செய்தவ, அதால நாங்கள் அவவிண்ட பார்ட்டியில் ஏதாவது செய்ய வேணும்" என்பது போன்ற பண்டமாற்று முறை தான் இங்கத்தைய சிநேகிதம். சுய லாபம் தேடாத, பிரதிபலன் பார்க்காத நட்பை நான் இன்னமும் இங்கு காணவில்லை.

பிரதிபலன் எதிர் நோக்காத அந்த மாதிரி நல்ல நட்பு பக்கத்தில் தான் இருக்க வேண்டுமென்றில்லை. எங்கேயிருந்தாலும் எனக்கென்று ஒரு நட்பு இருக்கிறதே என்ற ஆறுதல் போதுமே, நினைத்தவுடன் போனில் கதைத்தால் அல்லது ஒரு வரியில் கடிதம் பார்த்தால் போதுமே..?! அப்படியெல்லாம் நினைப்பு வரும் போது, ஏக்கப் படும் போதும் என்னால் வேறு யாரை நினைக்க முடியும் உன்னைத் தவிர? சொல்லு பார்க்கலாம். அந்த ஏக்கம் தான் இந்தக் கடிதங்களை நான் எழுதுவதற்கான பரிதாபமான காரணம்.

எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிவிட முடியாது. ஆனால் நான் எதையும் உன்னிடம் சொல்லாமல் இருந்ததில்லையே? 1983ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் , இனக்கலவரம் வெடித்த அந்த நாளின் பகல் பொழுதில் என் அம்மம்மாவின் மரண நிகழ்வுக்காக உன் அம்மாவுடன் வந்திருந்தாய். அன்றைக்கு தான் நானும் நீயும் சந்தித்த கடைசி நாள். அதற்குப் பிறகு இத்தனை வருசங்களாக எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் பொய்விட்டது. அதற்குப் பரிகாரமாக இது இருக்கட்டுமேன். உன்னோடு கதைக்க வேணும்மென்று நினைக்கிற ஒவ்வொன்றையும், உன்னோடு கதைக்க வேணுமெண்டு நினைக்கிற ஒவ்வொரு கணத்திலும், உன்னோட கதைக்க முடியேலையேண்ட என்னுடைய ஏக்கங்களையும் இந்தக் கடிதங்களில் எழுதி வைத்துவிட்டுப் போகிறேனே.!? நீ திரும்ப பதில் சொல்லாவிட்டாலும் கூட உன்னிடம் எதையும் மறைக்காமல் தெரிவித்து விட்ட, கதைச்ச மனத் திருப்தியாவது எனக்குக் கிடைக்கட்டுமேன்.?! பாரன்.. என்னுடைய வடிகால்களை எப்படியெல்லாம் தேடுகிறேன் எண்டு பார்த்தியா?

ஒரு வகையில் இந்த கடித வடிகால்கள் என்னுடைய கோபங்களை அல்லது சந்தோசங்களை, துயரங்களை, அனுபவங்களை பதிந்து வைக்க ஏதுவாக இருக்கப் போகிறது.

இரண்டு மாதத்திற்கு முன்பே இந்த மடல் தொகுப்பை வாங்கி வைத்திருந்தேன். புது வருசம் பிறக்கட்டும்.. எழுதத் துவங்குவோம் என்று காத்திருந்து சரியா New Year count down ஐ தொலைக்காட்சியில் பார்த்து முடிந்ததும் வீட்டில் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு, இந்த தொகுப்பின் முதல் தாளில் முதல் இரண்டு வரிகளும் தான் எழுத முடிந்தது. அதுக்கு பிறகு இருப்பவை எல்லாம் நாலு நாளைக்குப் பிறகு எழுத வாய்ப்புக் கிடைத்தவை. இந்தக் கடிதம் முடிய எத்தனை நாளாகுமென்றும் என்னால் சொல்ல முடியாது..எப்படியும் இன்றைக்கு முடித்துவிடுவேன் என்று தான் நினைக்கிறேன். :))

இந்த முதல் கடிதத்திலேயே நீ ஏன் சலிப்படைய வேண்டும்? இருபது வருட காலங்களுக்கும் மேலான கதைகளும், தற்கால நிகழ்வுகளும் என்று நிறைய இருக்கு. ஒவ்வொன்றாகத் தான் உனக்குச் சொல்ல முடியும். ஒழுங்கு முறையில் சொல்லாவிட்டாலும் நினைவில் வரும் ஒவ்வொன்றையும் அப்பப்ப வந்து எழுதி வைத்துவிடலாமென்று நினைக்கிறன். பாப்பம்... எந்தளவுக்கு இதை என்னால் சாதிக்க முடியுதெண்டு. இப்பிடித் தான் நான் தாயாகியதை உணர்ந்த முதல் கணத்தில் என் மகனுக்கு எதையாவது எழுதி வைக்க வேண்டுமென்று தோன்றியது. அப்படி எனக்கு ஒரு எண்ணம் வர காரணம் ஒரு எழுத்தாளர் தான். தொலைக்காட்சியில் பார்த்தேன் அவரை. பெயர் வாய்க்குள் வரவில்லை. 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார் அவருக்கு. சடுதியில் இந்த எழுத்தாளருக்கு புற்றுநோய் என்றும், அவர் தன்ர கடைசி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் அவருக்கு தெரிய வந்த பின் அவர் எடுத்த முடிவு இது. தன்னுடைய மகனுக்கு மகனையிட்டு தனக்கிருந்த கனவுகளையும், எண்ணங்களையும், அந்த மகனை தான் எப்படியெல்லாம் வளர்க்க வேண்டுமென்று விரும்பியதையும் எழுதி தான் இல்லாமல் போனாலும் தன்னுடைய அன்பு அந்த புத்தக வடிவில் தன் மகனுடன் இருக்கும் என்றதால் எழுதத் தொடங்கினாராம். அது என் மனதை மிகவும் பாதித்துவிட்டது சிவசோதி.

மரணம் என்ற நிரந்தரப் பிரிவின் பின்னாலும் எழுத்துகள் மூலம் தமது அன்புக்குரியவர்களுடன் ஒன்றிப் போயிருக்கலாமே என்ற அவருடைய எதிர்பார்ப்பு என்னை மிகவும் கவர்ந்தது... அதன் பின் நானும் அஷ்வத்தாமாவுக்காக எழுதத் தொடங்கினேன். ஆனால் என்னுடைய கவலையெல்லாம்.. அஷ்வத்தாமாவுக்கு நான் தமிழில் எழுதியதை வாசித்து உணரக் கூடிய அளவுக்காகவது தமிழ் தெரிந்திருக்க வேண்டுமே என்பது தான்.. :) அவருக்கு நான் எழுதத் தொடங்கியது கூட இப்படித் தான் இடைக்கிடை தற்காலிகமாக இடையில் நின்றுவிடுகிறது. பல சமயம் எழுத மறந்து விடுகிறேன். பெரும்பாலானா சமயங்களில் என்னத்தைத் தான் எழுதுறது எண்டு மனச்சலிப்பு வந்து விடுகிறது. ஆனாலும் இந்த முயற்சியால் எனக்கு நன்மையே. நானும் நினைவுகளை திரும்பவும் ஓரு தடவை அசை போடலாம். அதிலேயே ஆழ்ந்து போகலாம். அப்படியே பிரபஞ்சத்தின் ஒரு துளியாய் உறைந்து மீள எழாமல் போனாலும் பரவாயில்லை... ஆனாலும் நான் கட்டாயம் மீள வர வேண்டும். நிறைய எழுத வேண்டுமே... அதற்காக. :):)

சரி இந்தக் கடிதத்திற்கான வியாக்கியானம் இந்தளவு போதுமெண்டு நினைக்கிறன். வழமையாக நீயனுப்பும் கடிதங்களின் கடைசியில் இரண்டு வரியாவது நட்பைப் பற்றிய பொன் மொழியாகவோ , பாடல் வரிகளாகவோ எழுதுவாயே.. நினைவிருக்கா?? இண்டைக்கு எனக்கு நினைவில் வந்தது நீ எழுதின இந்த வரிகள் தான்...

"காலங்கள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்;

நம் நட்பின் ஆழம் மட்டும் மாறாது!"

ஞாபகமிருக்கா இந்த வரிகள்? எனக்கு எப்பவும் நினைவிலிருக்கும் இந்த வரிகள்.

இப்படிக்கு,

உன் அன்பு மறவாத தோழி

சாந்தா