ஞாயிறு, 18 ஜூலை, 2010

அஞ்சல் - 2



ஜனவரி 6, 2005

அன்பு மறவாத தோழி!

இப்ப நீ என்ன செய்து கொண்டிருப்பாய் என்று நினைத்துப் பார்க்கிறேன். இப்ப என்றால் இந்த நிமிடத்தில், இந்த வினாடியில் உலகின் ஏதோ ஒரு பகுதியில், நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் அதே நிமிஷத் துளியில் நீ என்ன செய்து கொண்டிருப்பாய் என்று யோசிக்கிறேன்.

நீ ஈழத்தில் தான் இன்னமும் இருக்கிறாய் என்றால் இப்போது அங்கு இரவுநேரம். அநேகமாக நித்திரைக்குப் போயிருக்க வேண்டும். வெடிகுண்டுகளோ, துப்பாக்கிச் சத்தங்களோ இன்றிரவு அங்கு வெடிக்காமல் இருந்தால் ..ஆமிக்காரங்கள் சோதனை என்ற சாக்கில் வீடுகளுக்குள் பூராமலிருந்தால் , நெஞ்சு படபடக்க - பயத்தோடு , கடவுள் என்ற ஒருத்தனிடம் காப்பாற்றச் சொல்லி மனதுக்குள் இறைஞ்சிக் கொண்டு, எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாதேயென்ற கிலியில்லாமல் நீ தூங்கிக் கொண்டிருப்பாயா? இன்றைய சூழலில் முடிகிறதா உன்னால்? அல்லது தூங்கமலே விழித்துக் கொண்டிருக்கிறாயா?? இவையெல்லாம் உனக்கு பழகிப் போயிருக்குமோ?? பீதியும் , கிலியும் , கவலையும் கூட புழக்கத்திலிருப்பதும், பழகிப் போவதும் கூட ஒரு வேதனையான விந்தை தான் இல்லையாடி??

உன் அப்பா, அம்மா, அண்ணா, தம்பி செந்தில், தங்கச்சி நந்தினி என்று ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்க்கிறேன். உன் சித்தப்பாவையும், உன் பக்கத்துவீட்டு சிநேகிதி வள்ளியையும் கூட என்னால் மறக்கமுடியவில்லை. அப்பாவுடன் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் போன போது பரந்தனில் உன் வீட்டுக்கு வந்த அந்த நாள் கூட நினைவில் இருக்கிறது. அன்றைக்கு தானே முதன் முதலாக இட்லியே நான் சாப்பிட்டேன்?? :) அப்போது உன் வீட்டில் உன் அம்மம்மாவும் இருந்தார். உன் வீட்டுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்த அந்த சின்ன நீரோடையும், மரங்களும், சுத்தமான காற்றும்...கூட இப்போது நினைத்தாலும் ஆசையாக இருக்கு ..இன்னொருக்கா பார்க்கமாட்டேனா என்ற பரிதாபமான ஏக்கம் அடிக்கடி மனதுக்குள் ஓடுவதும், ப்ச் என்று வெறுமையான சப்புக் கொட்டுதலும் எனக்கும் பழகிவிட்டது.

உன்னுடைய நினைவுகளில் உனக்கு அடுத்தாற் போல் உன் அண்ணா தான் கண்ணுக்குள் நிற்கிறார்.எல்லோரையும் விட .. அடிக்கடி அவரைத் தானே உன் குடும்பத்தார்களில் சந்தித்திருக்கிறோம். அது மட்டுமல்ல அவரைப் பற்றியே நீ எப்போதும் பேசிக் கொண்டிருந்ததாலும் , எனக்கும் அண்ணன் இல்லாத ஆதங்கத்தினாலும் உன் அண்ணா என் ஞாபகடுகளில் விஷேசமாக பதிந்து போனார் என்று நினைக்கிறேன்.

அவருக்கு தான் எத்தனை அன்பு உன் மேல்?? கண்ணும் கருத்துமாக கவனிப்பார் உன்னை?? உன் கால் சப்பாத்து வார் கழன்றால் கூட அவர் குனிந்து பூட்டி விட்ட அந்த அன்பையும், கவனிப்பையும் பார்த்து நான் அதிசயப்பட்டிருக்கிறேன்.. நீ கொடுத்து வைத்த தங்கை என்று நினைத்துக் கொள்வேன் அப்போதெல்லாம்.

இப்போது அந்த அன்பான அண்ணாவுக்கும் திருமணம் நடந்திருக்கும். மனைவி, குழந்தைகள் என்று அந்த அண்ணாவும் குடும்பஸ்தராகியிருப்பார். உன் தம்பி செந்தில் கூட குடும்பஸ்தராயிருப்பார்.. ஆனால் உன் தங்கை நந்தினி....??? நந்தினியைப் பற்றியும் உன்னைப் பற்றியும் அறிந்து கொள்ளத் தான் மனம் அடித்துக் கொள்கிறது..:((:(

உனக்கு நினைவிருக்கோ எனக்கு தெரியாது ஆனால் எனக்கு நல்லா நினைவிருக்கு..உன் தங்கை நந்தினியை என் தம்பி செல்வாவுக்கு சோடிப் பொருத்தம் நல்லா இருக்கெண்டு அடிக்கடி நானும் நீயும் சொல்லிக் கொள்வது..இவையள் ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று அடிக்கடி சொல்வாய்.. எனக்கு அந்த திட்டம் பிடித்தது நானும் நீயும் அந்த உறவு முறையில் இணைபிரியாமல் எதிர்காலத்திலும் இருக்கலாமே என்று..!

அவரவர் வாழ்கையின் திசைகள் எப்படியெல்லாம் மாறிப் போகுமோ என்ற யோசனையே நமக்கு அப்போது இருந்ததில்லையே...என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று எனக்கு புரியவில்லையடி! அந்த பாடசாலைச் சுவர்களுக்குள்ளான உலகமும், அதற்குள்ளான எட்டுவகை பாடப் புத்தகங்களின் பக்கங்களுக்குள்ளேயே வட்டமிட்ட வாழ்கையின் எல்லையும், அதற்கேற்ற பக்குவத்துக்கான எண்ணங்களும், கனவுகளும் ...

அவற்றைத் தவிர என்ன தெரிந்து வைத்திருந்தோம்?? எதுவுமேயில்லை.. இவையெல்லாவற்றையும் கடந்த ஒரு உலகம் கோரமான முகங்களோடு அடித்துப் போட காத்திருக்கிறது என்ற சுரணைகள் உணராத காலம் அது... !

அந்த நாட்களில் பிரிய நேரிடலாம் என்ற நினைப்பைக் கூட ஏதோ ஒரு நம்பிக்கையில் பிரியவே மாட்டோமென்ற உறுதியுடன் அலட்சியம் செய்த பருவகாலம் அது...!

அப்போது எங்களுக்கு ஜாதி என்றால் என்னவென்ற அக்கறையே இருந்ததில்லை. பிரிவினை என்ற கோடு கண்ணுக்கு தெரிந்ததேயில்லை. எல்லாவற்றையும் விட நட்பில் வித்தியாசங்கள் ் , வேற்ய்பாடுகள் தெரியாது,. ஒற்றுமை, மற்றவர்களிடம் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் அத்தனை அந்நியோன்னியம். இந்த அன்னியோனியம் எனக்கு என் பிராண நாதரிடம் கூட இருக்கிறதா என்று அடிக்கடி என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. அந்தப் பருவத்தின் பக்குவம் கூட ஒருவகையில் கபடமில்லாத அழகான அறியாமையுடனான து தான்.

அந்த அறியாமையுடனேயே இருந்திருக்கலாம் என்று மனம் இப்போதெல்லாம் பேராசைப்படுவதை தடுக்கமுடியவில்லை.. வாழ்கையின் வ்லிகளை சந்தித்து சந்தித்து ரணமான பாதங்களுடனான இந்த பயணத்துடன் ஒப்பிடும் போது அந்த அறியாமை எவ்வளாவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது.

அப்போதெல்லாம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி என்ற அந்த கட்டிடச் சுவர்களுக்குள்ளாலான உலகமும், என் வீடும், உன்னோடான நட்பையும் தவிர்த்து அவற்றைக் கடந்த வேறொரு உலகத்தைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில் எனக்கு ஆர்வமிருந்ததில்லை அல்லது அறிந்து கொள்ள அஞ்சினேன் என்று சொல்லலாம். உனக்கும் அப்படியிருந்ததா என்று நான் தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

அந்தக் நாட்களில் எனக்கான எதிர்காலத்தின் கற்பனைகளில் கூட உன்னைப் பிரியக்கூடாது என்ற உறுதியும், பிரிய மாட்டேன் என்ற நம்பிக்கையும் இருந்ததே..?! எங்களையும் விட எங்கள் வாழ்கையின் முடிவுகளை எடுக்கப் போகும் எங்கள் வீட்டுப் பெரியவர்களைப் பற்றிய பிரக்ஞை ஏன் அப்போதே எனக்கு உறைக்கவில்லை என்று நினைத்தால் வேதனையான வேடிக்கையாக இருக்கிறது இப்போது.

டொக்டராக வேண்டுமென்ற என்னுடைய கனவு போலவே உன்னை பிரியக் கூடாது என்ற கனவும் எதிர்பார்ப்பும் கானலாகிப் போய்விட்டது. இந்த இரண்டு கனவுகளினது தோல்விகளையும் மனதில் ஆழமாகப் புதைத்துவிட்டு இயலாமையை பழகிக் கொண்டுவிட்டேன். இதனால் எதையும் நான் சாதித்துவிடவில்லை..எதையும் சமப்படுத்தவுமில்லை. எந்த வகையிலும் நினைவுகளை சமாதானப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் அந்த இயலாமையும் புதைத்துவிட்ட நினைவுகளும் மனதை ஊடுருவிக் கிழிக்கும் முள் சுமந்த வேர்களாக படர்ந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது .

எங்காவது ஏதாவது பாடசாலைகளின் பெயரில் பழைய மாணவ மாணவிகளின் ஒன்றுகூடல் பற்றிய செய்திகளை படிக்கும் போது எனக்குள் பெருமூச்சு தான் எழுகிறது. இணையத்தில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஒன்று கூடல் கூட கனடாவில் நடக்கிறது ..:( ஆனால் எனக்கு தான் எங்கும் போக முடியாமல் இருக்கிறேன், இன்னமும் என்னுடைய கிரீன் கார்ட் வராததினால்...ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு விதமான தடைகளும், இயலாமையும் அவற்றை புறந்தள்ளவியலாத வாழ்வுமாக....எத்தனை இருந்து என்ன என்ற சலிப்பை தருகிறது.

சரி விடு... போன அக்டோபர் 16ம் திகதி என் மகன் அஷ்வத்தாமாவுக்கு முதலாவது பிறந்த நாள். வீட்டுக்குள் எங்கட குடும்பத்தாரோடு கொண்டாடினோம். இன்னொரு நாள் பிறந்த நாள் பார்ட்டியை வைக்கலாமென்று விட்டுவிட்டோம். அது அப்படியே நாள் கடந்து கடந்து போய்விட்டது பல காரணங்களால். கடைசியில் ஓரளவு எங்களுக்கு இயலுமான அளவில் ஒரு ஹால் கிடைத்து இந்த ஜனவர் 2ம் திகதி தான் நடத்தினோம். அண்டைக்கே என்ர தம்பி பாலாவின் மனைவிக்கு பேபிஷவரும் நடத்தி முடிச்சன். அந்த விபரங்களை பின்னாளில் விபரமாக எழுதுறன். எனக்கு நிறைய எழுத விருப்பம் தான்.. ஆனால் கை வலிக்குதடி.. உனக்கும் இந்த பென்னம்பெரிய கடிதம் வாசிச்சால் களைப்புத் தான் வரும்.. அதனால் இதை இத்தோடு முடிக்கிறன்..

"A friend is one who walks in when others walk out"

-Walter Winchell


இங்ஙனம்

அன்புத் தோழி

சாந்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக