வியாழன், 15 ஜூலை, 2010

அஞ்சல் - 1



01.01.2005

அன்புள்ள தோழி சிவசோதிக்கு!

புது வருட வாழ்த்துகள்!

இதை எழுதத் தொடங்கும் 2005ம் ஆண்டின் முதலாம் நாளான இன்று நான் நலமாயிருக்கிறேன். இன்னும் எத்தனை காலத்துக்குப் பிறகு நீ இந்தக் கடிதங்களைப் பார்க்கப் போகிறாயோ எனக்குத் தெரியவில்லை. இவற்றையெல்லாம் நீ படிக்கும் சந்தர்ப்பம் இல்லாமலே போய்விடுமோ என்பதும் கேள்விக்குறியே! ஆனாலும் அறிவு கேட்கும் இந்தக் கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு நான் உனக்குக் கடிதங்களை எழுதத் தான் போகிறேன். நிறைய எழுதுவேன்... இந்தக் கடிதங்களை நீ எப்போது படிக்கப் போறீயோ அன்று நீயும் நலமா?

முன்பு எனக்கும் உனக்கும் இடையிலான நட்பு தொடங்கிய நாட்களிலிருந்து உனக்குத் தெரியாமல் எது என் வாழ்கையில் நடந்திருக்கிறது? உன்னுடைய வாழ்கையில் தான் என்ன நடந்தது நானறியாதது..? ஆனால் இன்றைய சூழலில் இத்தனை வருட காலத்தில் உன் வாழ்கையில் என்னென்ன நடந்தன என்று எனக்கு தெரியாமலே போய்விட்டது. இன்ன இன்ன நடந்தன என்று சிலர் சொன்ன கொடுமையான செய்திகள் கூட உறுதிப்படுத்த முடியாதவையாக இருக்கின்றன. அவை உறுதிப்படுத்தப்படாமல் இருக்கும் வரை தான் நானும் என்றாவது நீ இவற்றைப் படிப்பாய் என்ற நம்பிக்கையுடன் இக் கடிதங்களை உனக்கு எழுதலாம். என்னைப் பற்றியோ, என் வாழ்கையில் நடந்தேறியிருக்கும் சம்பவங்கள் பற்றியோ நீ அறிந்திருக்க வாய்ப்புக் கிடைத்ததா? எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்பா இறந்தது, நாங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்தது, என்னுடைய வாழ்கையில் தேவகுமார் என்ற புது மனிதர் வந்தது, எனக்குக் கல்யாணம் நடந்தது, பாலாவுக்குக் கல்யாணம் நடந்தது, எனக்கு பிள்ளை பிறந்தது என்று ஏதாவது அறிந்தாயா? தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருந்தால் இந்தத் தகவல்கள் சொன்னவர்களிடம் எம்மை தொடர்பு கொள்ள விலாசமோ, தொலைபேசி எண்ணோ வாங்கியிருக்க மாட்டாயா? அல்லது எனக்கு உன்னைப் பற்றி தகவல்கள் சொன்னவர்களிடம் உன்னுடைய சரியான விலாசமோ அல்லது தொலைபேசி இலக்கமோ என்னால் எடுக்க முடியாதது போல் உன்னாலும் முடியாமல் போயிருக்குமோ என்னமோ?

உனக்கு எப்பவோ கல்யாணம் நடந்திருக்கும். பிள்ளைகள் பிறந்திருப்பார்கள். பெரிசாக வளர்ந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். உன் கணவர் யார்? அவர் என்ன தொழில் செய்வார்? இப்போது நீ எங்கிருக்கிறாய்? எதுவுமே எனக்குத் தெரியாது. நான் 1991ம் ஆண்டு மும்பாயில் நின்ற போது பரந்தனைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன். அவர் உங்கள் குடும்பத்தில் எல்லோரையும் தெரிந்து வைத்திருந்தார். ஆனால் அப்போது அவருக்கு ஊரின் நிலமை தெரிந்து கொள்ளக்கூடிய வசதியிருக்கவில்லை. யாரும் ஊரில் இருந்து வருபவர்கள் மூலம் தான் அவருக்கும் ஈழத்து நடப்புகள் பற்றித் தெரிய வருமாம். அப்படி யாரோ ஒருவர் மூலம் ஏதோ கேள்விப்பட்ட செய்தியாகத் தான் உன்னைப் பற்றிய செய்தியையும் சொன்னார். "இந்திய இராணுவம் சின்னைய்யரிண்ட ரெண்டு மகள்மாரில ஒரு மகளை சுட்டதில பெட்டை செத்துப் போச்சுது". எந்த மகள் என்ற விபரம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அது மட்டுமல்ல இதில் எந்தளவு உண்மை இருந்தது என்று அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது சிவசோதி! ஆனால் அந்தச் செய்தி கேட்டு இரண்டு மூன்று நாட்கள் என்னால் சாப்பிட முடியவில்லை. அறைக்குள்ளேயே கிழமைக் கணக்கில் முடங்கிக் கிடந்தேன்.

அதே நபர் தான் "சின்னையாவின் ஒரு மகள் செத்துப் போச்சுது. இன்னொரு மகள் ஜேர்மனியில் இருக்கிறா" என்றும் சொன்னார். அதுவும் உண்மையா என்பதும், எந்த மகள் அங்கிருப்பது என்பதும், அந்த மகளின் முகவரியும் கூட தெரிந்திருக்கவில்லை. இதே போல் இன்னொரு தடவை அமெரிக்காவில் ஒரு பிறந்த நாள் விழாவில் அருள்நங்கை என்ற பெண்ணை சந்தித்தேன். "நீங்கள் சுண்டிக்குளியில் படிச்சனீங்களெல்லா? லிட்டரி மீட்டீங்கில் பாட்டுப் பாடுவீங்களெல்லா?" என்று என்னை வந்து விசாரித்த அந்தப் பெண்ணை எனக்குத் தெரிந்திருக்கவில்லை யார் என்று. பத்தாம் வகுப்பில் "C" கிளாசில் படித்தவராம். எனக்கோ அந்தப் பிள்ளையைப் பார்த்த நினைவே இல்லையடி. ஆனாலும் பழைய பள்ளிக்கூடத்துப் பிள்ளையென்றதும் அவருடன் இருந்து உரையாடினேன். எல்லாரைப் பற்றியும் சொன்னார். நீ சொன்ன மாதிரியே அனோஜா தேவரூபினியின் அண்ணாவைத் தான் கலியாணம் செய்திருக்கிறா. இப்ப கனடாவில் இருக்கினமாம். மீனலோஜனி டொக்டராம். கொழும்பில் வேலையாம். கேசவவதனியும் முரளியும் கொழும்பிலாம். அவளுக்கு 2 பொம்பிளப் பிள்ளையளாம். இவ்வளவும் சொன்ன அருள் தான் சொன்னா "நீயும் கொழும்பில் ஏதோ நர்ஸிங்ஹோமில் நர்ஸா இருக்கிறாய் என்று..." ஆனால் நர்ஸிங்ஹோமின் பெயரோ தொலைபேசி எண்ணோ அருளிடமிருந்து கிடைக்கவில்லை. அது என்ன உன்னைப் பற்றிய தகவல்கள் மட்டும் இப்படி எனக்கு மொட்டையாவே கிடைச்சுக் கொண்டிருக்கெண்டு தான் எனக்கு விளங்கேலை.

இப்பவும் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் எனக்கு உன்னைப் பற்றிய எந்த விபரமும் தெரியவில்லையடி. நான் கேட்காமலே அனோஜாவின் கனடா போன் நம்பரை கொடுக்க முடிந்த அவரால் உன்னுடைய நம்பரையோ விலாசத்தையோ தர முடிந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நினைச்சு கவலைப்பட்டன். அனோஜாவுடன் எடுத்து கதைக்க என்ன இருக்கு என்ற சலிப்பு வந்தது என்னவோ உண்மை தான். ஆனால் உன்னைப் பற்றி ஏதாவது தகவல்கள் கிடைக்கலாமே என்ற நப்பாசையுடன் போன் எடுத்தேன். எதுவும் கிடைக்கவில்லை. தேவரூபினியின் அம்மாவுடன் கதைக்க முடிந்தது. அங்கிள் அந்த டிசம்பரில் தான் செத்துப்போனார் என்று அன்ரி சொன்னார். நாங்கள் சந்தேகப்பட்டது போல் தேவரூபினியின் அண்ணாவுக்கும் அனோஜவுக்குமிடையில் காதல் தான் கல்யாணத்தில் முடிந்திருக்கு. இல்லாட்டில் லண்டன் போன அனோஜா அடுத்த மாசமே மெடிக்கல் எண்டரன்ஸை சாட்டிக் கொண்டு திரும்பி யாழ்ப்பாணம் வந்திருப்பாவே? :) வந்தும், மெடிக்கல் படிச்சும் பாரன்.. கடைசில கனடா வந்து பார்மஸிஸ்ட் தான். ஏன் மெடிக்கலை தொடராமல் விட்டிச்சு எண்டு தான் விளங்கேலை. ஆனால் போனில் அதைக் கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை.

இண்டைக்கு புது வருசம்..இண்டையிலிருந்து உனக்கு என்னால் முடியும் நேரங்களிலெல்லாம், எனக்கு உன்னோடு கதைக்க வேண்டுமென்று தோன்றுகிற நேரங்களிலெல்லாம் இந்த ஜேர்னலில் கடிதம் எழுதப் போகிறேன். இந்த ஜெர்னலை வாங்கி மாசக் கணக்காகிறது. ஆனால் இன்றைக்கு தான் எழுதத் தொடங்குகிறேன். எதற்கும் ஒரு தொடக்கம் இருக்கத் தானே வேண்டும்? இந்தத் தொடக்கம் உனக்கும் எனக்குமிடையிலான கால, தூர இடைவெளிகளை கடிதங்களால் நிரப்ப நான் எடுக்கும் முயற்சிக்கானது. இந்தக் கடிதங்களை நீ படிக்கப் போகும் அந்த நிமிடம் தான் எமக்கிடையிலான இடைவெளியை அகற்றப் போகும் நேரம். அதுவரை எனது முயற்சிகள் பாதிக் கிணறு தாண்டிய நிலையில் தான்.

இவள் ஏன் கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறாள் என்று நீ நினைக்கலாம். ஒவ்வொரு வினாடியும் உன் நினைவாகவே இருந்தேன் என்று எவராவது எவருக்காவது சொன்னால் என்னைப் பொறுத்தவரை அது பச்சைப் பொய். பழைய நினைவுகள் ஏதோ ஒரு காரணத்தால் அல்லது ஏதோ ஒரு தூண்டுதலால் அல்லது ஏதோ ஒரு சூழ்நிலையில் குளத்தின் அடியிலிருந்து "குபுக்" என்று எழும்பும் நீர்க் குமிழ் போல் மனதினடியிலிருந்து சட்டென்று வெடிக்கும். அந்த வெடிப்பின் தாக்கம் ஒரு கணத்தில் மறைந்து போகக் கூடும் அல்லது பல நாட்கள் அப்படியே அழுத்திக் கொண்டிருக்கவும் கூடும். சட்டென்று ஏதோ ஒரு காரணத்தாலோ அல்லது ஏதோ ஒரு விளைவாலோ உன்னைப் பற்றி நினைவு வரும் போது மனசு மிகவும் கனத்துப் போகிறது சிவசோதி. பல சமயம் என்னோடு எனக்கு பக்கத்திலோ அல்லது நினைத்தவுடன் உன்னோடு பேசக் கூடிய வசதியோ இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று தோன்றும். சில நேரம் ஏதாவது சம்பவங்கள் நிகழும் போது "அட இந்த நேரம் அப்பா இங்க இருந்திருந்தால் நல்லா இருக்கும்" என்றோ வேறு சில நேரங்களில் "சிவசோதி இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் "என்றோ மனசு ஏங்கும். அந்த மாதிரியான தருணங்களில் உனக்கு நான் சொல்ல முடியாமல் போனவற்றை, நீயிருந்திருக்க வேண்டுமென்று நான் விரும்பிய சந்தர்ப்பங்களைப் பற்றி அப்பப்ப எழுதி வைக்க கடித வடிவம் தான் எனக்கு தோதுப்பட்டது.

நான் இப்ப என்னுடைய சொந்த வாழ்கையைப் பொறுத்தவரை சந்தோஷமாகத் தானிருக்கிறேனடி. ஆனால் நான் சந்தோசமாய் இருக்கிறேன் என்பதை உனக்குத் தெரிவிக்க முடியவில்லையே என்ற கவலையுடன் இருக்கிறேன். நீ சந்தோசமாயிருக்கிறாயா எனறு அறிய முடியாத கவலையோடு நானிருக்கிறேன். "கட்டாயமாக நீ சந்தோசமாய் தானிருப்பாய்; சந்தோசமாயிருக்க வேண்டுமென்ற நினைப்போடு நானிருக்கிறேன். நான் இப்படி உன்னைப் பற்றி நினைப்பது போல நீயும் என்னைப் பற்றி நினைக்கிறாயா என்று அடிக்கடி நினைத்தபடி நானிருக்கிறேன். என்னை மறக்குமளவுக்கு உன் மனநிலை மாறியிருக்காது, அல்லது என்னை மறக்கடிக்குமளவுக்கு உனக்கு எந்த அசாதாரணமும் நிகழ்ந்திருக்காது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு நானிருக்கிறேன்.

எவ்வளவு தான் சந்தோசமாக இருந்தாலும் வாழ்கையில் அவ்வப்போது வெறுமையாக உணரும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது. என்ன இல்லை என்று இந்த வெறுமை? எந்தக் கவலையின் விம்பமாய் இந்த வெறுமை என்று புரியாத குழப்பம்.

விருப்பப்பட்ட வாழ்க்கைத் துணை, வேலைக்கு போகாமல் வீட்டிலிருக்கிறேன். அதுவும் ஒரு வகையில் குறை தான். ஆனாலும் அதே நேரம் இயந்திரத்தனமாக தினமும் வேலைக்கு போய், வீட்டு வேலை செய்து மாய்ந்து, ஓய்ந்து போகும் பரிதாபத்துக்குரிய பெண்ணாக இல்லாமல் பிள்ளையோடும், கணனியோடும், என் எழுத்துகளோடு கோலோச்சும் பெண்ணாக பொழுது போகக் கிடைத்து வைத்ததில் திருப்தி தான். ஆனாலும்.... ஏதோ ஒரு வெறுமை மனதில் நிழலாக படர்ந்து கொண்டு தானிருக்கிறது.

ஒரு வகையில் பழைய யாழ்ப்பாண வாழ்க்கைக்கான ஏக்கம் கூட இந்த வெறுமைக்குக் காரணமாக இருக்கலாம், அந்த ஏக்கம் எப்பவும் யேசு நாதரை சிலுவையில் அடித்த ஆணியின் கூர்மை கொண்ட வலியாக மனதில் துருத்திக் கொண்டு தானிருக்கு. ஊரை விட்டு வந்து இருவது வருசங்களுக்கு மேலாகினாலும் மனம் மட்டும் இன்னமும் அங்கேயே நிற்கிறது. இது தான் அந்த வெறுமைக்கு காரணமோ தெரியவில்லை.

என்ன விஷயமென்றாலும் சொல்வதற்கு, பக்கத்திலிருந்து பகிர்ந்து கொள்வதற்கு ஆளே இல்லாமல் இருக்கிறேன் என்பது மட்டும் சத்தியம். இருக்கினம் தான் சிநேகிதிகள் என்ற பெயரில் இரண்டு மூன்று பேர் இங்க. ஆனால் யாரோடும் ஒளிவு மறைவு இல்லாமல் கதைக்க முடியாது. அவரவர்க்கு அவரவர் குடும்பம். தங்கள் தங்கள் தேவைகளுக்காக மட்டும் போனில் கூப்பிட்டு கதைத்து பேசும் அறிமுகங்களாக மட்டுமே தமக்குள் எல்லைகள் வரித்த சிநேகிதிகள். "சாந்தாக்கா எங்கட பார்ட்டிக்கு வந்து நிண்டு உதவி செய்தவ, அதால நாங்கள் அவவிண்ட பார்ட்டியில் ஏதாவது செய்ய வேணும்" என்பது போன்ற பண்டமாற்று முறை தான் இங்கத்தைய சிநேகிதம். சுய லாபம் தேடாத, பிரதிபலன் பார்க்காத நட்பை நான் இன்னமும் இங்கு காணவில்லை.

பிரதிபலன் எதிர் நோக்காத அந்த மாதிரி நல்ல நட்பு பக்கத்தில் தான் இருக்க வேண்டுமென்றில்லை. எங்கேயிருந்தாலும் எனக்கென்று ஒரு நட்பு இருக்கிறதே என்ற ஆறுதல் போதுமே, நினைத்தவுடன் போனில் கதைத்தால் அல்லது ஒரு வரியில் கடிதம் பார்த்தால் போதுமே..?! அப்படியெல்லாம் நினைப்பு வரும் போது, ஏக்கப் படும் போதும் என்னால் வேறு யாரை நினைக்க முடியும் உன்னைத் தவிர? சொல்லு பார்க்கலாம். அந்த ஏக்கம் தான் இந்தக் கடிதங்களை நான் எழுதுவதற்கான பரிதாபமான காரணம்.

எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிவிட முடியாது. ஆனால் நான் எதையும் உன்னிடம் சொல்லாமல் இருந்ததில்லையே? 1983ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் , இனக்கலவரம் வெடித்த அந்த நாளின் பகல் பொழுதில் என் அம்மம்மாவின் மரண நிகழ்வுக்காக உன் அம்மாவுடன் வந்திருந்தாய். அன்றைக்கு தான் நானும் நீயும் சந்தித்த கடைசி நாள். அதற்குப் பிறகு இத்தனை வருசங்களாக எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் பொய்விட்டது. அதற்குப் பரிகாரமாக இது இருக்கட்டுமேன். உன்னோடு கதைக்க வேணும்மென்று நினைக்கிற ஒவ்வொன்றையும், உன்னோடு கதைக்க வேணுமெண்டு நினைக்கிற ஒவ்வொரு கணத்திலும், உன்னோட கதைக்க முடியேலையேண்ட என்னுடைய ஏக்கங்களையும் இந்தக் கடிதங்களில் எழுதி வைத்துவிட்டுப் போகிறேனே.!? நீ திரும்ப பதில் சொல்லாவிட்டாலும் கூட உன்னிடம் எதையும் மறைக்காமல் தெரிவித்து விட்ட, கதைச்ச மனத் திருப்தியாவது எனக்குக் கிடைக்கட்டுமேன்.?! பாரன்.. என்னுடைய வடிகால்களை எப்படியெல்லாம் தேடுகிறேன் எண்டு பார்த்தியா?

ஒரு வகையில் இந்த கடித வடிகால்கள் என்னுடைய கோபங்களை அல்லது சந்தோசங்களை, துயரங்களை, அனுபவங்களை பதிந்து வைக்க ஏதுவாக இருக்கப் போகிறது.

இரண்டு மாதத்திற்கு முன்பே இந்த மடல் தொகுப்பை வாங்கி வைத்திருந்தேன். புது வருசம் பிறக்கட்டும்.. எழுதத் துவங்குவோம் என்று காத்திருந்து சரியா New Year count down ஐ தொலைக்காட்சியில் பார்த்து முடிந்ததும் வீட்டில் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு, இந்த தொகுப்பின் முதல் தாளில் முதல் இரண்டு வரிகளும் தான் எழுத முடிந்தது. அதுக்கு பிறகு இருப்பவை எல்லாம் நாலு நாளைக்குப் பிறகு எழுத வாய்ப்புக் கிடைத்தவை. இந்தக் கடிதம் முடிய எத்தனை நாளாகுமென்றும் என்னால் சொல்ல முடியாது..எப்படியும் இன்றைக்கு முடித்துவிடுவேன் என்று தான் நினைக்கிறேன். :))

இந்த முதல் கடிதத்திலேயே நீ ஏன் சலிப்படைய வேண்டும்? இருபது வருட காலங்களுக்கும் மேலான கதைகளும், தற்கால நிகழ்வுகளும் என்று நிறைய இருக்கு. ஒவ்வொன்றாகத் தான் உனக்குச் சொல்ல முடியும். ஒழுங்கு முறையில் சொல்லாவிட்டாலும் நினைவில் வரும் ஒவ்வொன்றையும் அப்பப்ப வந்து எழுதி வைத்துவிடலாமென்று நினைக்கிறன். பாப்பம்... எந்தளவுக்கு இதை என்னால் சாதிக்க முடியுதெண்டு. இப்பிடித் தான் நான் தாயாகியதை உணர்ந்த முதல் கணத்தில் என் மகனுக்கு எதையாவது எழுதி வைக்க வேண்டுமென்று தோன்றியது. அப்படி எனக்கு ஒரு எண்ணம் வர காரணம் ஒரு எழுத்தாளர் தான். தொலைக்காட்சியில் பார்த்தேன் அவரை. பெயர் வாய்க்குள் வரவில்லை. 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார் அவருக்கு. சடுதியில் இந்த எழுத்தாளருக்கு புற்றுநோய் என்றும், அவர் தன்ர கடைசி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் அவருக்கு தெரிய வந்த பின் அவர் எடுத்த முடிவு இது. தன்னுடைய மகனுக்கு மகனையிட்டு தனக்கிருந்த கனவுகளையும், எண்ணங்களையும், அந்த மகனை தான் எப்படியெல்லாம் வளர்க்க வேண்டுமென்று விரும்பியதையும் எழுதி தான் இல்லாமல் போனாலும் தன்னுடைய அன்பு அந்த புத்தக வடிவில் தன் மகனுடன் இருக்கும் என்றதால் எழுதத் தொடங்கினாராம். அது என் மனதை மிகவும் பாதித்துவிட்டது சிவசோதி.

மரணம் என்ற நிரந்தரப் பிரிவின் பின்னாலும் எழுத்துகள் மூலம் தமது அன்புக்குரியவர்களுடன் ஒன்றிப் போயிருக்கலாமே என்ற அவருடைய எதிர்பார்ப்பு என்னை மிகவும் கவர்ந்தது... அதன் பின் நானும் அஷ்வத்தாமாவுக்காக எழுதத் தொடங்கினேன். ஆனால் என்னுடைய கவலையெல்லாம்.. அஷ்வத்தாமாவுக்கு நான் தமிழில் எழுதியதை வாசித்து உணரக் கூடிய அளவுக்காகவது தமிழ் தெரிந்திருக்க வேண்டுமே என்பது தான்.. :) அவருக்கு நான் எழுதத் தொடங்கியது கூட இப்படித் தான் இடைக்கிடை தற்காலிகமாக இடையில் நின்றுவிடுகிறது. பல சமயம் எழுத மறந்து விடுகிறேன். பெரும்பாலானா சமயங்களில் என்னத்தைத் தான் எழுதுறது எண்டு மனச்சலிப்பு வந்து விடுகிறது. ஆனாலும் இந்த முயற்சியால் எனக்கு நன்மையே. நானும் நினைவுகளை திரும்பவும் ஓரு தடவை அசை போடலாம். அதிலேயே ஆழ்ந்து போகலாம். அப்படியே பிரபஞ்சத்தின் ஒரு துளியாய் உறைந்து மீள எழாமல் போனாலும் பரவாயில்லை... ஆனாலும் நான் கட்டாயம் மீள வர வேண்டும். நிறைய எழுத வேண்டுமே... அதற்காக. :):)

சரி இந்தக் கடிதத்திற்கான வியாக்கியானம் இந்தளவு போதுமெண்டு நினைக்கிறன். வழமையாக நீயனுப்பும் கடிதங்களின் கடைசியில் இரண்டு வரியாவது நட்பைப் பற்றிய பொன் மொழியாகவோ , பாடல் வரிகளாகவோ எழுதுவாயே.. நினைவிருக்கா?? இண்டைக்கு எனக்கு நினைவில் வந்தது நீ எழுதின இந்த வரிகள் தான்...

"காலங்கள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்;

நம் நட்பின் ஆழம் மட்டும் மாறாது!"

ஞாபகமிருக்கா இந்த வரிகள்? எனக்கு எப்பவும் நினைவிலிருக்கும் இந்த வரிகள்.

இப்படிக்கு,

உன் அன்பு மறவாத தோழி

சாந்தா

நான் எழுதுவது கடிதமல்ல...நட்பு!

வாழ்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம்; இந்த ஒரு வாழ்கையிலேயே எத்தனையோ சம்பவங்கள் நிகழ்கின்றன; எதிர்பாரத திருப்புமுனைகள் வாழ்கையை திசை திருப்பிவிடுகின்றன;புதிது புதிதான அறிமுகங்கள்;சந்திப்புகள், பிரிவுகள், உறவுகள், பிறப்புகள் , மரணங்கள் என்று பலவற்றைப் பார்த்துக் கொண்டு தான் எம்முடைய வாழ்கையின் ஒவ்வொரு மைல் கற்களையும் கடந்து வருகிறோம்.
இவற்றில் பல விசயங்கள் மறந்து போய் விடுகின்றன, அல்லது முக்கியத்துவமிழந்து விடுகின்றன. சில விசயங்கள் அல்லது மிகச் சிலரே மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றனர். இவற்றில் எத்தனை முயன்றாலும் அழிக்க முடியாத நினைவு பிம்பங்களக மனதில் பதிந்து வேருன்றி விடுவதில் நட்புக்கு இணையாக வேறெதையும் ஒப்பிட முடியாது.

அதிலும் பள்ளி நாட்களில் மலர்ந்த நட்புக்கு இணையாக வேறெந்த பிணைப்பும் ஈடாக முடியாது; அந்த நட்பில் கிடைத்த இனிமையும் பசுமையும் கலந்த நினைவுகள் காலகாலத்துக்கும் எம்மைத் தொடர்ந்து வரும் எமது நிழலுக்கொப்பானவை.

பள்ளிப் பருவத்தில் கிடைத்த நட்பை பள்ளி முடிந்து , கல்லூரி நுழைந்து, கல்யாணமாகி, குடும்பஸ்தராகிய பின்னாலும் தொடரமுடியுமெனில் அப்படித் தொடரும் நண்பர்களை தான் மிகுந்த அதிர்ஷட சாலிகள் என்பேன் ; அந்த வகையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிர்ஷ்டம் செய்தவர்கள். கல்யாணத்தின் பின்னும் பள்ளிக்கால நண்பர்களை தொடர்பில் வைத்திருப்பதும், சந்திப்பதும் அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரமான விசயங்கள் ; ஆனால் பெண்களின் வாழ்கையில் திருமணம் என்ற திருப்பு முனையின் போது திசை திருப்பப்பட்ட வாழ்கையின் சூழ்நிலைகளும் , வாழ்வியல் அமைப்புகளும் நட்பு பாராட்டும் சாத்தியக் கூறுகளை அரிதாக்கி அல்லது இல்லாமலே போக்கிவிடுகின்றன.

இதுவரை வேரூன்றியிருந்த பிறந்த வீடு என்ற தோட்டத்திலிருந்து ஒரு பெண் தன்னை முழுவதுமாக பிடுங்கி புகுந்த வீடு என்ற புதிய தோட்டத்தில் பதியம் வைக்கும் அந்தக் கணத்தில் தனது மனதுக்குப் பிடித்த பல விசயங்களை அந்த மனதுக்குள்ளேயே புதைத்துவிட்டு தான் புது இடத்தில் வேரூன்ற முயற்சிக்கிறாள். அவள் தனக்குள் சமாதிகளாக புதைத்த ஆத்மாவின் துடிப்புகளில் பெரும்பாலும் அவளுடைய தோழமைகளும் அடக்கமாகிவிடுகின்றன.

என்னுடைய பள்ளி நாட்களில் எனக்கும் ஒரு தோழமை கிடைத்தது; அந்த தோழமையை சுமந்த அந்த சுகமான நாட்களின் நினைவுகள் இப்போது ஏங்கிக் கிடக்கும் மனதுக்கு மருந்தா அல்லது அது தான் ரணமா என்று புரியாத புதிராக இருக்கின்றது. அந்த இனிமையான பள்ளி நாட்கள் இந்தக் கணம் வரை மட்டுமல்ல..என் கடைசி நேர சுவாசத்துளி அடங்கும் போது கூட பசுமையாக இருக்கப் போகும் ஒரு இனிமையான தோழமை அது!! அந்தத் தோழமையை எனக்கு தந்தவள் தான் சிவசோதி!

நட்பு என்ற பிணைப்பை என்னால் அவ்வளவு எளிதாக விவரித்து விட முடிவதில்லை. ஆனால் நட்பு என்ற ஒன்றைப் பறறி எளிமையாக சொல்லச் சொன்னால் நான் உச்சரிப்பது "சிவசோதி "" என்ற வார்த்தையை மட்டும் தான். ஒரு இனிமையான நட்பும் அந்த நட்பைப் பாராட்ட நமது மனமும் உணர்வும் தேர்வு செய்யும் நபரும் மிகவும் விசேசமானவர்கள். அந்த வகையில் என்னுடைய வாழ்கையில் விசேசமானவள் சிவசோதி.

என்னுடைய பள்ளி நாட்களில் எத்தனையோ சிநேகிதிகள் வந்தாலும் சிவசோதிக்கு என் மனதில் கொடுத்திருந்த இடத்தை யாரோடும் என்னால் பகிரமுடியவில்லை.பள்ளியையும் கடந்து எங்கள் வீட்டுக்குள்ளும் நுழைந்து என் குடும்பத்தாரின் மனதிலும் ஒரு பிணைப்பை உருவாக்கிவிட்ட விசேசமான நட்பு அவளுடையது!

சில பல குடும்ப சிக்கல்களை , ரகசியங்களை கூட கலந்து பேசுமளவுக்கு என் அம்மாவை நெருங்கியிருந்தாள்; நான் மட்டுமே அப்பாவுடன் போன இடங்களுக்கு இன்னொரு மகளாக என்னோடு சேர்ந்து அப்பாவுடன் பயணிக்குமளவுக்கு அப்பாவின் அன்புக்கும் பாத்திரமானாள்; என்னைப் போலில்லாமல் சண்டை போடாத ஒரு அக்காவாக என் தம்பிமாரின் இதயங்களிலும் இடம் பிடித்துக் கொண்டாள். அத்தனை லாவகமும் , திறமையும் , உறுதியும் அவளுடைய நட்புக்கு இருந்தது.

ஒரு அன்னிய மனிதர் எமது மனதை நம்மை அறியாமலேயே ஆக்கிரமிப்பதும், உரிமை கொண்டாடுவதும், அக்கறைப்படுவதும், பங்கெடுப்பதும், ஆதரவு காட்டுவதும் ஆதூரமளிப்பதும் என்று சகலவிதமான இதங்களையும் வழங்கும் அந்த உன்னதமான உரிமை அல்லது பிணைப்பை , அந்த வியப்பை நானும் அனுபவித்தேன்... சிவசோதி மூலம்.

அதுவரை வகுப்பில் சேர்ந்து படிக்கும் பக்கத்து இருக்கை மாணவிகளுடனான உரையாடலை மட்டும் தான் சிநேகம் என்று நினைத்திருந்த எனக்கு சிவசோதிக்காக நான் செய்த ஒவ்வொரு உதவிகளும், அவள் எனக்காக மற்றவர்களிடம் காட்டிய வேறுபாடும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது..!

மிகவும் இதமான இனிமையான நட்பை எனக்குள் வியாபிக்க வைத்த அந்த தோழியை நான் இன்று தொலைத்துவிட்டேன். தொலைந்து போன என் நட்பின் முகவரியை கடந்த 26 ஆண்டுகாலமாக தேடிக்கொண்டிருக்கிறேன். ஈழத்தில் இருக்கும் வரை அவளுடனான தொடர்பு கடித வடிவில் தொடர்ந்து கொண்டிருந்தது. நான் இந்தியா வந்த பின்னாலும் அவளுடனான கடிதத் தொடர்பு இருந்தது... இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் வைத்த சில நாட்களிலேயே வெடித்துவிட்ட யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் அவளிடமிருந்து கடைசியாக ஒரு மடல் வந்தது ... "நானும் அங்க வந்துவிடட்டாடி?? இங்க நிலமை மோசமாகும் போல இருக்கு...தொடர்ந்து படிக்கேலாது போல இருக்கு..அங்க வந்து படிப்பை தொடரலாமா எண்டு விபரம் எழுது "

பழையபடி அவளும் நானும் ஒன்றாக திரியலாம் என்ற கனவுகளுடன் பதில் அனுப்பினேன். ஆனால் அதன் பின் இன்று வரை அவளிடமிருந்து எந்த மடலும் இல்லை...! :(

என்னுடைய மடல்கள் குளத்தில் எறிந்த கற்களாய் போனதோ என்னமோ??? அவளுக்கோ அவளுடைய குடும்பத்தினருக்கோ என்ன நடந்தது என்று இன்று வரை எனக்கு தெரியாது. இத்தனை வருட காலத்தில் அவளைப் பற்றி எனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அவளுடைய ஊர்க்காரர்கள் யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் அவளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.. அமெரிக்கா வரும் விடயமாக மும்பாய் வந்து நின்ற போது அங்கு அவளுடைய ஊர்க்காரர் ஒருவரை சந்தித்தேன். வழமை போல் அவரிடமும் அவளைப் பற்றியும் அவளுடைய குடும்பத்தினர் பற்றியும் விசாரித்தேன். இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவள் இறந்துவிட்டாள் என்று அவர் சொன்ன போது என் இதயமே பிளந்து விட்டது. ஒரு வார காலமாக அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். ஏதோ சூனியத்தில் தள்ளிவிடப்பட்ட மாதிரி இருந்தது. அப்பாவின் மரணத்தின் பின் நான் அதிகமாக அவளுக்காக தான் அழுதேன். அந்த தடவை அமெரிக்கப் பயணம் சரிவரவில்லை; திரும்ப சென்னைக்கே வந்துவிட்டேன்.

அவள் இல்லை; என்னுடைய தோழிக்கு மரணம் என்ற முடிவு நேர்ந்திருக்கிறது; அதுவும் அவலமான துர்மரணம்; அவளுடைய கடைசி நேரத் துடிப்பு எத்தனை வலிமிகுந்ததாக இருந்ததோ? என்னவெல்லாம் நினைத்துக் கொண்டு உயிரை விட்டாளோ ? ஆனால் இவை எதையும் தெரியும் வாய்ப்புக் கூட இல்லாமல் இருந்திருக்கிறேன் அத்தனை நாளும் என்ற நினைவு தான் மிகவும் வலித்தது. அவளை இன்னொரு தடவை பார்க்கவே முடியாத விதியை சுமந்து கொண்டு தான் இனிமேல் நான் என் வாழ்நாள் முழுக்க திரிய வேண்டுமென்ற நினைப்பு நாளுக்கு நாள் அதிகமாகச் சுட்டெரிக்கத் தொடங்கியது.

ஒரு ஆறேழு மாத காலம் இந்த தகிப்புடன் தான் உழன்று கொண்டிருந்தேன். அ்ந்த உறுத்தலுடன் தான் அமெரிக்கா வந்தேன்.. வந்த ஓரிரு மாதங்களில் யாழில் எங்களோடு படித்த அருள் நங்கை என்ற சக மாணவியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமெரிக்காவில் கிடைத்தது. பழைய கால வசந்தங்களையும், பிரிவுகளையும் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த போது அவர் " என்னுடைய தோழி இறக்கவில்லை துப்பாக்கிச் சூட்டில் இறந்தது என் தோழி சிவசோதியின் தங்கை நந்தினி என்றார்.. ! ஆனால் நான் இப்படிக் கேள்விப்பட்டேன் என்றதும் அவரே சந்தேகத்துடன் உதட்டைப் பிதுக்கினார்..

சிவசோதியைப் பற்றிய மேலதிகமான தகவல்களை அருள் நங்கையாலும் எனக்கு தர இயலவில்லை. எனக்கு எப்படி இருந்திருக்கும்??? என் தோழியா அல்லது அவளுடைய ஒரே ஒரு தங்கையா இறந்தது என்று இன்று வரை எனக்கு தெளிவாகத் தெரியாது.

நட்பின் அருகாமையில்லாத வாழ்கை பல தருணங்களில் நரகத்து முள்ளாக என்னை நெருடியிருக்கிறது. இந்த 26 வருடங்களாக நான் அனுபவித்த மகிழ்ச்சியான நிமிடங்கள், துயரத்தில் துடித்த நாட்கள், சிக்கலில் தவித்த தருணங்கள் என்று பல சூழ்நிலைகளில் அந்த நட்பின் அருகாமையை மனம் ஏக்கத்துடன் தேடியிருக்கிறது. அந்த நேரங்களில் தேவைப்பட்டும் கைவரக் கிடைக்காத அந்த ஏக்கம் , இயலாமை மனதளவில் என்னை எத்தனையோ தடவை தளர்வடைய வைத்திருக்கிறது. அந்த வேதனையின் போதெல்லாம் நினைவில் சிவசோதியின் முகம் தான் துருத்திக் கொண்டு வந்து நிற்கிறது.

அவளும் நானும் கவலைகள் எதுவும் தெரியாமல் குருவிகள் போல் திரிந்த அந்த நாட்களில் ஒரு சின்ன விசயத்தைக் கூட அவளிடம் நான் மறைத்ததில்லை; அவளும் அப்படித் தான். ஆனால் இப்போது எத்தனையோ நிகழ்வுகளுடன் என் வாழ்கை பாதையை நான் நகர்த்திக் கொண்டிருக்கிறேன்..அவளிடம் சொல்லவும் பகிரவும் என்னிடம் நிறைய சங்கதிகள் குவிந்து கொண்டிருக்கிறது....அவளிடம் சொல்ல வேண்டியவற்றை அவளிடம் சொல்லாமலே எனது வாழ்கை முடிந்துவிடும் பட்சத்தில் அவளுக்கென்று நான் விட்டுச் செல்லவென்று தான் இந்த கடிதங்களை ஒரு நாள் எழுதத் தொடங்கினேன். அவளை நான் சந்திக்க நேர்ந்தால் அப்படியே இந்தக் கடிதங்களை தூக்கி அவளிடம் கொடுத்துவிட்டு நான் ஆசுவாசமாக மூச்சு விடுவேன்.. இல்லையென்றால் அவள் தன்னந்தனியாக இருந்து அவளுக்காக நான் சேகரித்த நினைவுகளை படிக்கட்டும்... எப்படியாயினும் அவளுடைய கையில் இந்தக் கடிதங்கள் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் ஜேர்னலில் எழுதத் தொடங்கிய கடிதங்களை தான் நான் இங்கு தரப் போகிறேன்....

இந்த நிமிடம் வரை என்னுயிர் தோழி உயிருடன் இருக்கிறாளா அல்லது இல்லையா என்ற தகவல் கூடத் தெரியாமல் , அவள் எங்காவது உயிருடன் இருக்க வேண்டுமென்ற பிராத்தனையுடன், அவளுக்கு எதுவும் நேர்ந்திருக்காது, அவள் உயிருடன் தான் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் , என்றைக்காவது அவளை சந்திக்காமலா போய்விடப் போகிறேன் என்ற எதிர்பார்ப்புடன் .....நான் இந்த கடிதங்களை அவளுக்காக அவளை தேடி , எழுதத் தொடங்கினேன்.

அவற்றை நான் இங்கு தருவது கூட அவளோ அல்லது அவளைத் தெரிந்த எவரோ படிக்க மாட்டார்களா , படித்துவிட்டு என்னை தொடர்பு கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கத்தில் தான் .....

உங்களில் யாராவது வழியில் ஒரு அழகான ஈழத்துப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்தால், அவளுடைய பெயரைக் கேட்க முடிந்தால், அந்தப் பெயர் சிவசோதி என்று இருந்தால்....தயவு செய்து அவளுடைய சிநேகிதி சாந்தகௌரி இன்னமும் அவளைத் தேடிக் கொண்டிருப்பதாக சொல்லுங்கள்... ஒரு தொலைந்து போன நட்புக்கு மீண்டும் உயிரூட்டிய புண்ணியம் உங்களுக்குக் கிடைக்க கடவுள் அருள் செய்வாராக!