
நீ அங்கு நலமாயிருப்பாய் என்ற நம்பிக்கையில் நான் நலம் .
சிவசோதி!
.பல வருடங்களின் பின்னான சந்திப்புகள் மனதை அப்படியே புரட்டிப் போட்டுவிடுகின்றன. பழைய நாட்களின் சாயங்கள் இன்னமும் மாறாமல் மனதின் அடியில் பத்திரமாக மடிந்திருக்கும். அவ்வப்போது ஏதேனும் ஒரு பாடல் அல்லது ஒரு வார்த்தை, அல்லது ஏதேனும் ஒரு புத்தகம் சம்மந்தமேயில்லாமல் மடிந்திருக்கும் நினைவுக்களை தனக , பழைய ஞாபகங்கள் குபுக்கென்று நிமிர்ந்து நலம் விசாரிக்கும்.. திடீரென்று ஒரு நாள் அந்த மடிந்திருக்கும் ஞாபகபக்கங்களின் கர்த்தாகள் ”ஏய் எப்படி இருக்கிறாய்...என்னை நினைவிருக்கா” என்று முன்னால் வந்து நின்றாலோ, போனில் கூப்பிட்டாலோ அந்த தருணத்தின் தாக்கத்தை தாங்கும் பலம் இல்லாமல் மனம் கனத்துப் போய்விடுகிறது.
இன்றைக்கும் அப்படித் தான்...!
சுண்டிக்குளி மகளிர் கல்லூரியை விட்டு , வேம்படி மகளிர் பாடசாலைக்கு போன போது அந்த புதிய சூழலில் பழைய பள்ளியின் வாசனையை இழந்த சோகத்தினூடாக நட்பு என்று யாரையுமே கொண்டாட மனம் வராமல் சும்மா ஒப்புக்காக முகம் பார்த்தவர்களிடம் சிரித்துவிட்டு படிப்புக்காக புத்தகங்களுக்குள் தலையை புதைத்துக் கொண்டிருந்த நாட்களில் என்னைப் போலவே ரஜனியும் வந்து சேர்ந்தாள். இரண்டு பேரும் ஒரே மாதிரி புதிய சூழலில் நம்மை நாமே பொருந்திக் கொள்ள வகை தெரியாமல் இருந்த சூழலின் ஒற்றுமையே எங்கள் இருவரையும் ஒருவருக்கொருவருடன் சிநேகமாக்கிவிட்டிருந்தது.
வேம்படி பள்ளிக்கூடம் மட்டும் எனக்கு புதியதாய் இல்லை.. அப்போது தான் பழைய பள்ளியில் உயிர் தோழியாக என்னோடு கூடித் திரிந்த நீயும் பிரிந்து உன் சொந்த ஊருக்கு போய்விட்ட நேரம் அது. உன்னுடைய இடம் வெற்றிடமாக ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ரஜனி வந்து ஒட்டிகொண்ட காலம் அது...!
உனக்கும் அவளை தெரியும். ஒரு தடவை என்னை நீ வேம்படியில் சந்திக்க வந்திருந்தாய்.. அப்போது ரஜனியை உனக்கு அறிமுகப்படுத்தினேன். கிளிநொச்சியில் உனக்கு தெரிந்த ஒரு மாணவியை (கோகிலாவோ கோமதியோ ) ரஜனிக்கும் தெரிந்திருந்ததே...நினைவிருக்கா??
ரஜனியின் வீடு நல்லூர்க் கந்த சுவாமி கோவிலுக்கு அருகில் இருந்தது. கொஞ்ச நாட்களிலேயே இருவரும் நல்ல தோழிகளாக பழகிவிட்டோம். சைக்கிளில் ரஜனி வீட்டுக்கு நான் போவதும் என் வீட்டுக்கு ரஜனி வருவதும், இருவரும் சேர்ந்து வாசுகி வீட்டுக்கு போவதும்...ஐயர் மாஸ்டரிடம் ஸ்போக்கின் இங்கிலீஷ் படிக்க போகும் நாட்களில் வகுப்பு முடிந்த கையோடு ரஜனி வீட்டுக்கு போய்விடுவதும்.... எவ்வளவு அழகான நாட்கள்...? அப்போது இலங்கை இராணுவத்தின் ஆதிக்கம் இருந்த காலம்.. இராணுவ வண்டிகளுக்கு பயந்து பயந்து வீதிகளில் போய் வந்த காலம் ...ஆனாலும் என் தாய் நாட்டில் நான் சந்தோஷமாக இருந்த கடைசிக் காலக்கட்டங்களில் என்னோடு பறந்து திரிந்த ஒரு குட்டிக் குருவி தான் அவள்..! :)
என்னைவிட என் சிநேகிதிகள் மிகவும் பக்குவப்பட்டவர்களாகவே எனக்கு எப்போதும் தெரிவார்கள். எனக்கு தோழிகள் என்று நிறைய இருந்ததில்லை. உயிர் தோழி என்று நீ சிவசோதி...நெருங்கிய தோழிகள் என்று கேசா, சுகந்தி, துஷித்தா,,! ஆனாலும் சிவசோதிக்கு அடுத்து பொஸஸிவ்வாக எனக்கு மட்டுமான தோழியாக கருதியது என்றால் ரஜனியை தான்...!! :) நீயும் ரஜனியும் என்னுடன் எந்த ஒரு எதிர்பார்ப்போ அல்லது முன்னறிமுகமோ இல்லாமல் சந்தித்த கணத்திலேயே மனதுக்குப் பிடித்துப் போனவர்கள்.
ஏதோ ஒன்று எப்படியோ எதற்காகவோ உங்கள் இரண்டு பேரையுமே அடிக்கடி நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். யாரையும் திரும்ப காணமுடியாத ஏக்கங்களோடு வெறும் கற்பனைகளையும், இணையத்தில் திரிவதையுமே பெரும்பாலான வாழ்கையாகிப் போனது எனக்கு. புதிதாக எத்தனை பேரை சந்தித்துவிட்டேன். ஓரிருவரோடு நட்பாக பழகிக் கொண்டுமிருக்கிறேன். ஆனால் ஒரு ஒட்டுதல் இல்லாத நட்பாகவே அவர்கள் தெரிவதும் , பழைய நட்புகளுக்காகவே மனம் ஏங்குவதும் ....என்ன வாழ்கை இது??
வெறும் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருப்பதிலேயே வாழ்கையை முடித்துக் கொள்ளும் துர்பாக்கியசாலிகளாக தான் பெரும்பாலான பெண்கள் அதுவும் குறிப்பாக புலம் பெயர்ந்த பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அப்படியொரு பாதையில் தான் நானும் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் கொஞ்சம் புத்துயிர் கொடுக்க இன்று ரஜனி என்னை அடையாளம் கண்டு பிடித்திருக்கிறார். மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஒரு நல்ல தோழியின் வெற்றிடத்தின் சோகத்தை ஆற்ற அப்போதும் இதே ரஜனி தான் வந்தாள். இப்போதும் எந்த நட்பின் தொடர்புமில்லாத நிலையில் அதே ரஜனி தான் வந்திருக்கிறாள். :)
1984ம் வருடம் ஈழத்தையும் , எல்லாவற்றையும் விட்டு வெளிக்கிட்டு..... இத்தனை வருடங்களின் பின் இன்று உள்பெட்டியில் ரஜனியின் மடல்..அவளை மறக்காத என்னிடம் தன்னை ஞாபகப்படுத்தி நினைவிருக்கா என்று மடல் மூலம் கேட்கிறாள்.. :)
போன் நம்பர்கள் பரிமாறிக் கொண்டுள்ளோம். நாளைக்கு போனில் ரஜனியோடு பேச வேண்டும் என்று மனதுக்குள் ஆவல் இருக்கிறது. ஆனால் பேசுவேனா என்று தெரியவில்லை.
கடந்து வந்த இத்தனை வருடங்களின் சுவடுகளும் வெறும் இலேசான கதைகளோடு என்னுடன் பயணிக்கவில்லை. என்னுடைய இழப்புகள், எனக்கான சோகங்கள்,நான் பறிகொடுத்தவை,என்னிடமிருந்து பறிக்கப்பட்டவை என்று கொடூரமான வலிகளை நாளைக்கு அவளுடன் பேசும் போது விவரிக்க வேண்டி வரலாம். என்னைப் போலவே அவளிடமும் நிறைய பக்கங்களுடன் அவளுடைய வாழ்கைக் கதையும் என்னிடம் சொல்லப்படவென்று இருக்கலாம். இரண்டையும் எதிர்கொள்ளும் வலிமை என்னிடம் இல்லை என்பது எனக்கு தெளிவாக தெரிவதாலேயே எனக்கு சந்தேகமாக இருக்கிறது ..அவளுடன் என்னால் பேச முடியுமா என்று. :(
எப்படியாவது இந்த ஃபேஸ்புக்கை விட்டு விலக வேண்டுமென்று நினைத்து நினைத்து , எப்படி விலகலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்க., இன்று எப்போதோ முகவரி தொலைத்த என்னுடைய பழைய நட்பை எனக்கு கண்டுபிடித்து தந்திருக்கிறது அதே ஃபேஸ்புக்...!
சிவசோதி உன்னையும் இப்படி காண முடிந்தால்....??
அன்புடன்
நான்.!
அஞ்சாத அஞ்சல். வாழ்த்துக்கள். அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி ஐயா.. ! இன்று தான் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.. மிக்க நன்றி ஐயா!!
நீக்குஇந்த வலைப்பூ முழுக்க கடிதங்கள் மட்டுமே... என் தோழிக்கு நான் ஒரு ஜர்னலில் எழுதி வைத்திருக்கும் மடல்களை அவ்வப்போது வலை ஏற்றிக் கொண்டிருக்கிறேன். எங்கிருந்தாவது இந்த மடல்களை அவள் வாசிக்க நேர்ந்தால் அவள் என்னை தொடர்பு கொள்வாள் என்ற ஒரு நூலிழை நம்பிக்கையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்..!!